திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.
உலகளவில் ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக கோடைக்கால வெப்ப அளவு மற்றும் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உலக வானிலை அமைப்பின் வரையறைப்படி வெப்ப அலையானது 5 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தொடர்ச்சியாக தினசரி வெப்பநிலையில் 5 டிகிரி உயர்வதாகும்.
தினசரி அதிகப்படியான வெப்பநிலை மற்றும் வெப்ப அலையின் காரணமாக பொதுமக்களின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வெப்ப அலையினால் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ள காரணத்தினால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெப்ப தொடர்பான நோய் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.
மக்கள் கோடைக்கால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும். தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.
(தினசரி 4 முதல் 6 லிட்டர்)
2. பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள்.
3. ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜீஸ், இளநீர், மோர்; மற்றும் பழச்சாறுகள் அவ்வப்போது குடிக்கவும்.
4. பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுங்கள்.
5. முடித்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருங்கள். (மதிய வேளையில் 12 மணி முதல் 4 மணி வரை)
6. நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்கவும்.
7. மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.
8. வெளியில் செல்லும் போது காலணிகளை அணியவும்.
9. மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்லவும்.
10. குறிப்பாக, மதியம் 11 மணி முதல் 3.30 மணி வரை தேவையில்லாமல் வெளியே செல்லாதீர்கள்.
11. சிறிய குழந்தைகள் மதிய வேளையில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்க அறிவுறுத்தவும்.
12. செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்கவும்.
அதிக உடல் வெப்பநிலையில், மயக்கம் ஏற்பட்டவர்களுக்கும், குழப்பமான மனநிலையில் சோர்வாக உள்ளவர்களுக்கும் முதலுதவி செய்து (வெயிலில் பாதிக்கப்பட்டவர;களின் ஆடையின் மேல் குளிர்ந்த நீரை ஊற்றவும்) அவசர ஊர்தி (108)க்கு தகவல் கொடுக்கவும்.
பொதுமக்கள் அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றி தங்களை வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ளுமாறும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu