கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ரெக்ஸ் கோரிக்கை

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் தொடங்கியது.
திருச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த நேர கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ரெக்ஸ் கோரிக்கை விடுத்து பேசினார்.
திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று காலை மேயர் அன்பழகன் தலைமையில் தொடங்கியது. ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் மேயர் அன்பழகன் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி படித்தார். அதனை அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் உட்பட அனைவரும் திரும்ப படித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றி அடுத்தடுத்து பேசினார்கள். சில உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் பாதாள சாக்கடைத்திட்ட பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள் எனக் கூறினார்கள். சில வார்டு உறுப்பினர்கள் பாதாள சாக்கடை பணி முடிவடைந்த இடங்களில் சாலை அமைக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் திருச்சி நகரில் அன்றாடம் போக்குவரத்து நெருக்கடி பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் இருசக்கர வாகனத்தில் கூட மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு விரைவாக செல்ல முடிவதில்லை. அந்த அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு காரணம் கனரக வாகனங்கள் குறிப்பாக காந்தி மார்க்கெட்டுக்கு லோடு ஏற்றி வரும் லாரிகள் தான். வாகனங்கள் பகல் முழுவதும் நகருக்குள் வருவதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஆதலால் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சி பகுதிகளில் இருப்பது போல் காலை 8 மணியிலிருந்து பத்து மணி வரையும் மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரையும் மாநகரத்திற்குள் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் நகர பொறியாளர் சிவபாதம் மற்றும் உதவியாளர்கள் மண்டல குழு தலைவர்கள் உட்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu