திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு பேருந்து விடுவதற்கு கோரிக்கை
திருச்சி மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு பேருந்து வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் அருள்ஜோஸ், திருச்சி மாவட்டஆட்சியர் பிரதீப்குமாருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்களும் பங்கேற்று தங்களது பிரச்சினைகளை மனுவாக எழுதி கொடுத்து பயன் அடைந்து வருகிறார்கள். பொதுமக்கள் வருவதற்கு பேருந்து வசதியும் தற்போது அதிக அளவில் உள்ளது.
ஆனால் இந்த பேருந்துகள் பழைய கலெக்டர் அலுவலக வளாத்திற்குள் வருவது இல்லை. பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் தான் மாவட்ட கருவூலம், டி.ஆர்.டி.ஏ. திட்ட இயக்குனர் அலுவலகம், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம், தனித்துணை ஆட்சியர் முத்திரை கட்டண அலுவலகம், மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் அலுவலகம், மாவட்ட கருவூல கணக்கு இணை இயக்குனர் அலுவலகம், தனித்துணை ஆட்சியர் நிலசீர்திருத்த அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் தேசிய நெடுஞ்சாலை நிலம் கையகப்படுத்தும் பிரிவு அலுவலகம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து துறை ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கம் ஆகிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
எனவே இந்த அலுவலகங்களுக்கு பல்வேறு அலுவல் தொடர்பாக வரும் பொதுமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கோரிக்கைககள் தொடர்பாக வரும்போது அவர்கள் பஸ் வசதி இல்லாததால் ஆட்டோவிற்கு ரூ.200 முதல் ரூ.500 வரை செலவிட வேண்டியது உள்ளது. மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு வரும் முதியோர்களும் இதனால் மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே கலெக்டர் அலுவலகம் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளையும் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்திற்கும் செல்வதற்கு உத்தரவிட்டு உதவும் படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu