ராமஜெயம் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை ஒத்திவைப்பு
கொலை செய்யப்பட்ட ராமஜெயம்.
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி தொழிலதிபர் கே.என். ராமஜெயம். இவர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, திருச்சியில் நடைபயிற்சி சென்ற போது கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அவரது உயிரற்ற உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கினை ஸ்ரீரங்கம் போலீசார் முதலில் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
இருப்பினும் எந்த துப்பும் துலங்கவில்லை. அதைத்தொடர்ந்து ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன், 'இவ்வழக்கை தமிழக அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரிக்க வேண்டும்' என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், டி.எஸ்.பி. மதன்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் 20பேரிடம் விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் அதில் 13 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர் சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்யராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன், கடலூர் லெப்ட் செந்தில் ஆகிய 13 ரவுடிகளுக்கு திருச்சி கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
அந்தசம்மனை ஏற்று கடந்த ௧௪ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது ௯ ரவுடிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.14ஆம் தேதி வழக்குக்கு ஆஜராகாத கடலூர் லெப்ட் செந்தில், திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், திண்டுக்கல் தினேஷ் ஆகிய 4 ரவுடிகள் இன்று திருச்சி நீதிமன்றத்தில் செயல்படும் சி.பி.சி.ஐ.டி நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
அதைத்தொடர்ந்து விசாரணை அதிகாரியும் எஸ்.பி.யுமான ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக மேற்கண்ட ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி தருமாறு மனு தாக்கல் செய்தார். அதில் வழக்கு விசாரணையின் போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நம்ப தகுந்த, ஆனால் உறுதி செய்யப்படாத தகவலின் அடிப்படையில் மேற்கண்ட, 13ரவுடிகள் மீது விசாரணை நடத்த வேண்டியுள்ளது என மனுவில் தெரிவித்து இருந்தார்.
மேலும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடிகள் அனைவரும் ஒப்புக்கொண்டு, கையெழுத்திட்டு தந்திருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கிடையே ரவுடிகள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் உண்மை கண்டறியும் சோதனை மருத்துவர்கள் மற்றும் வக்கீல்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என வாதிட்டனர்.மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், லெப்ட் செந்தில் ஆகியோரின் வழக்கறிஞர்கள், 'உண்மை கண்டறியும் சோதனைக்கு நிபந்தனையுடன் கூடிய சம்மத' மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி வருகின்ற 21ஆம் தேதி விருப்பம் தெரிவித்துள்ள 12பேரையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். முன்னதாக 12 பேருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் உரிய உடல் தகுதி பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu