திருச்சி நகரில் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க ரூ.92 கோடி ஒதுக்கீடு

திருச்சி நகரில் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க  ரூ.92 கோடி ஒதுக்கீடு
X

திருச்சியில் மழையால் சேதம் அடைந்துள்ள சாலை.

திருச்சி மாநகரில் மழையால் சேதமான சாலைகளை மேம்படுத்த ரூ.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி பகுதியில் 987 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 ஆயிரத்துக்கும் மேற் பட்ட சாலைகள் உள்ளன. இதில் பஸ்கள் செல்லும் முக்கிய சாலைகளும் அடங்கும். அவற்றில் பெரும்பாலான சாலைகள் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் பலத்த சேதம் அடைந்தன.

சில சாலைகள் குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு பயனற்ற நிலைக்கு போனது. பின்னர் மழை நின்றதும் பழுதான சாலைகளில் 'பேட்ஜ்வொர்க்' செய்து தற்காலிகமாக செப்பனிடப்பட்டன. சில இடங்களில் ஜல்லி மட்டும் போடப்பட்டது. ஆனால் பல சாலைகள் பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் சீரமைக்கப்படாமல் உள்ளன.

இந்த நிலையில் சாலைப் பணிகளை மேம்படுத்தி விரைவு படுத்த திருச்சி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதிய கான்கிரீட் சிமெண்டு சாலை மற்றும் தார்சாலைகள் அமைக்க ரூ.92 கோடி நிதி நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக மெயின் கார்டுகேட் பகுதியிலிருந்து மரக்கடை எம்.ஜி.ஆர்.சிலை வரைக்கும் 1.80 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.3.70 கோடியும், வெல்லமண்டி மெயின் ரோடு பகுதிக்கு ரூ.2 கோடியும், புத்தூர் நால்ரோட்டில் இருந்து தென்னூர் ஹைரோடு மேம்பாலம் வரை ரூ.3 கோடியும், செட்டிபாலத்திலிருந்து சி.எஸ்.ஐ. மருத்துவமனை வரை ரூ.8.20 கோடியும், டி.சி.டி.சி. பஸ் டெப்போ பகுதியில் ரூ.4.15 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல் மாநகரில் 4 மண்டலங்களிலும் உள்ள குறுகலான சாலைகள், வடிநீர் கால்வாய்கள் உள்ளிட்ட முக்கிய சாலைகளுக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

மொத்தம் ரூ.92 கோடி செலவிலான சாலை பணிகள் வருகிற ஜனவரி மாதம் தொடங்குவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்