திருச்சியில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் ரெயில்வே சுரங்கப்பாதை
திருச்சி கிராப்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
திருச்சி நகரின் மிகப் பழமையான பகுதியான கிராப்பட்டியையும், எடமலைப்பட்டிபுதூரையும் நீண்ட காலமாக பிரித்து வைத்திருந்தது ரயில்வே கேட் மற்றும் தண்டவாளம். ரயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம் மக்கள் வாகனங்களில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2011 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ரயில்வே உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி நான்கு ஆண்டுகளில் நிறைவுற்றது. 2016ஆம் ஆண்டில் இருந்து இந்த பாலம் பொது மக்களின் பயன்பாட்டில் உள்ளது.
பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள அத்தியாவசியமான இந்த பாலத்தில் அணுகு சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் ஆண்டின் 365 நாளும் தண்ணீர் தேங்கி நிற்பது பொதுமக்களுக்கு மிகவும் இடையூறை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் சுரங்கப்பாதை அருகில் தேங்கியிருந்த தண்ணீரை கடந்து செல்ல முயன்ற பெண் டாக்டர் ஒருவர் தண்ணீரிலே மூழ்கி ஜலசமாதி ஆனார். அது போன்ற ஒரு நிலை மற்ற இடங்களில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தற்போது ரயில்வே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் எல்லாம் ரயில்வே மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைத்து உள்ளார்கள்.ஆனால் தண்ணீரை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இந்த சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர் மக்களை எந்த நேரத்திலும் உயிர் பழிவாங்க காத்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இது தொடர்பாக திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜான் ராஜ் குமார் கூறும்போது 'கிராப்பட்டி ரயில்வே சுரங்கப்பாதையில் எப்போதுமே இரண்டு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கும்.மழை காலம் என்றால் அது ஐந்தடி அளவிற்கு கூட மாறும் .இதனை அப்புறப்படுத்துவதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் எச்சரிக்கை பலகை மட்டும் வைத்தால் போதுமா?
இந்த தண்ணீரை அகற்றினால் கிராப்பட்டி பகுதியிலிருந்து எடமலைப்பட்டிபுதூருக்கும், எடமலைப்பட்டி புதூரில் இருந்து கிராப்பட்டி க்கும் மக்கள் எளிதாக கடந்து வர முடியும். தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் அங்கு வருவதற்கு அச்சப்படுகிறார்கள். இந்த தண்ணீரை அகற்றி சீரான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்தால் எடமலைப்பட்டிபுதூர் பாரதி நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பு மக்கள் மிகவும் பயன் அடைவார்கள். அவர்கள் மட்டுமல்ல அனைத்து மக்களும் பயனடைய அவருக்கு வாய்ப்பு உள்ளது.
ஆதலால் உயிர் பலி வாங்க காத்திருக்கும் இந்த சுரங்கப்பாதை தண்ணீரை அகற்றுவதற்கு மாநகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.எவ்வளவோ தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் இந்த தண்ணீரை அகற்றுவது என்பது முடியாத காரியம் அல்ல. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கிறார்களா? என்பார்ப்போம்' என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu