திருச்சியில் தாறுமாறாக ஓடிய பஸ் மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு

திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் பெட்ரோல் பங்க் தடுப்பு கட்டையில் மோதி நின்றது.
திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் மோதி ரயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து மத்திய பஸ் நிலையத்திற்கு இன்று காலை 6 மணி அளவில் ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் தலைமை தபால் நிலையம் ரவுண்டானாவை தாண்டி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது டிடிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவரது பெயர் மோகன். வயது 35 ஆகும். இவர் ரயில்வே ஊழியர். ஜங்ஷன் ரயில்வே கால காலனியில் குடியிருந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் தான் ஆகிறது. பிரியா என்ற மனைவி உள்ளார். தண்ணீர் எடுப்பதற்காக வந்த போது இவர் தனியார் பஸ் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
ரயில்வே ஊழியர் சாவிற்கு காரணமான பஸ் அதன் பின்னும் அந்த பஸ் நிற்காமல் அருகில் இருந்த பெட்ரோல் பங்கின் முன் நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு தனியார் பஸ் மீது மோதி நின்றது. நல்ல வேளையாக அந்த இடத்தில் இன்னொரு பஸ் இல்லை என்றால் பெட்ரோல் பங்கில் மோதி மிகப் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும்.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமானவர்கள் கூடி விட்டனர். அவர்கள் விபத்துக்கு காரணமான தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கினார். இது பற்றிய தகவல் அறிந்ததும் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து டிரைவரையும் கண்டக்டரையும் மீட்டு சென்றனர்.
திருச்சியில் தனியார் பஸ்கள் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக செல்வது அடிக்கடி நடக்கும் விஷயமாகும் .வசூல் போட்டிக்காக வேகமாக பஸ் வந்த போது இந்த விபத்து நடந்ததா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காலை நேரத்தில் நடந்த இந்த விபத்து திருச்சி ஜங்ஷன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu