திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஜூன் 10ஆம் தேதி திங்கட்கிழமை வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது உண்டு
இந்த கூட்டத்தின் போது மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள குடிநீர், மின்விளக்கு ,சாக்கடை போன்ற அடிப்படை பிரச்சனைகள் மற்றும் பட்டா மாறுதல் குடும்ப அட்டை பெயர் நீக்கம் மாற்றம் செய்தல் ,முதியோர் உதவி தொகை ,சாதி சான்றிதழ் ,வருவாய் சான்றிதழ், நிலப்பிரச்சனை மற்றும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனுக்கள் அளிப்பது உண்டு.
மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படும் இந்த மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து உரிய துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார். இதன் மூலம் அவர்களது குறைகள் தீர்க்கப்படும். பெரும்பாலான காவல்துறை தொடர்பான குறைகளும் இந்த முகாமின் போது மனுக்களாக அளிக்கப்படும் அந்த மனுக்களை மாவட்ட அளவில் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுவது வழக்கம்.
திங்கட்கிழமை தோறும் இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் களைகட்டி காணப்படும்.பலமுறை மனுக்கள் அளித்தும் பலன் இல்லாத சூழலில் விரக்தி அடையும் பொதுமக்கள் சில நேரங்களில் உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயலும் சம்பவங்களும் நடப்பது உண்டு. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி இந்தியா முழுவதும் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
தற்போது தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் திரும்ப பெறப்பட்டதால் ஜூன் பத்தாம் தேதி அதாவது வருகிற திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 - நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 10.06.2024 முதல் பிரதி திங்கட்கிழமை வழக்கம்போல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவா;கள் தலைமையில் பொது மக்கள் குறைதீரக்கும் நாள் கூட்டம் நடைபெறும்.அதுசமயம் பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரடியாக வழங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu