வெள்ள பாதிப்பிலிருந்து காக்க நிரந்தரத் தீர்வு தேவை: திருநாவுக்கரசர் எம்.பி
மத்திய அரசைக் கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், மக்கள் விரோதப் போக்கை மேற்கொள்ளும் மத்திய அரசைக் கண்டித்தும் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சியில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் இருந்து புறப்பட்ட இந்த நடைபயண விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்.பி திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர்கள் ஜவகர் (மாநகர்), கோவிந்தராஜ் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில பொதுச் செயலாளர்கள் ஜி.கே.முரளிதரன், பெனட், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் உள்ளிட்டோர் ஏராளமானோர் பங்கேற்று அருணாச்சலம் மன்றத்திலிருந்து சிங்காரத்தோப்பு சந்திப்பிலுள்ள தியாகி அருணாச்சலம் சிலை வரை நடைபயணமாகச் சென்றனர்.
முன்னதாக திருநாவுக்கரசர் எம்.பி, பேட்டியில் கூறியதாவது,
நாட்டில் அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலை, அவற்றின் மீதான வரி உயர்த்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து ரூ.100-ஐ தாண்டிவிட்டது.
மழைநீர் வடிகால் வாய்க்கால் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததாலும், பெரும்பாலான நீர் வழித்தடங்கள் அடைபட்டுள்ளதாலும் மழைநீர் வடிய வழியின்றி, ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன. இதனால் மக்கள் கடும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் மழை, புயல் வருகிறது. வீதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை மோட்டார் வைத்து இறைத்து வெளியேற்றுகின்றனர். இந்த தற்காலிக நடவடிக்கையைத்தான், ஒவ்வொரு முறையும் அரசு செய்கிறது. மழை காலத்தில் எங்கு தண்ணீர் தேங்கி நிற்கும், அதை எவ்வாறு வெளியேற்றுவது என அந்தந்த பகுதியிலுள்ள அரசு அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்.
எனவே, இது குறித்து திட்டங்கள் வகுத்து, தேவையான நிதியை முன்கூட்டியே ஒதுக்கீடு செய்து, மழை இல்லாத நாட்களிலேயே நிரந்தர தீர்வுக்கான திட்டப் பணிகளை மேற்கொண்டுவிட்டால், மழை வரும் காலத்தில் மக்கள் துன்பப்பட வேண்டிய நிலை ஏற்படாது என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு போலீசார் தடையை மீறி நடைபெற்றதாகவும், கொரோனா தொற்று பரவும் விதமாக அனைவரும் ஒன்று கூடியதாக திருநாவுக்கரசர் எம்.பி, 25 பெண்கள் உட்பட 150 பேர் மீது திருச்சி கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu