ரோந்து போலீசார் துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி- டி.ஜி.பி. சைலேந்திர பாபு

ரோந்து போலீசார் துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி- டி.ஜி.பி. சைலேந்திர பாபு

சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உருவ படத்திற்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

ரோந்து போலீசார் கைத்துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு கூறி உள்ளார்.

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் ஆடு திருடர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது இல்லத்திற்கு வந்த தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு , பூமிநாதன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்த தனிப்படை போலீசாரை அவர் பாராட்டினார்.

இனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் டி.ஜி.பி. சைசேலந்திர பாபு பேசும்போது வீரமரணமடைந்த பூமிநாதன் குடும்பத்திற்கு முதல்வர் நிதியில் இருந்து 1 கோடி ரூபாயும், அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கு தமிழக காவல்துறை சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். காவல்துறை மீது தாக்குதல் நடைபெறுவது புதிதல்ல. 1856-ல் இருந்தே காவல்துறை மீது தாக்குதல் நடந்து கொண்டிருப்பது வழக்கமான ஒன்றுதான். காவல்துறை என்பது சவாலான துறை. இதில் பணியாற்றும் பொழுது உயிர் போவது இயற்கையான ஒரு விஷயம். பூமிநாதன் உயிர்த்தியாகம் செய்து தனது கடமையை செய்துள்ளார். ரோந்து போகும் போது போலீசார் கைத்துப்பாக்கியும், 6 தோட்டாக்களும் எடுத்துச்செல்ல அறிவுறுத்தி உள்ளோம். இது சம்பந்தமாக அதிகாரிகள் மட்டத்தில் இரண்டு மாத பயிற்சி நிறைவு பெற்றுள்ளது. உயிர் பறிக்கக்கூடிய சம்பவம் நடைபெறும்போது ஆயுதப் பிரயோகம் செய்யலாம் என சட்டம் சொல்கிறது. எனவே உயிர் போகக்கூடிய நிலை போலீசாருக்கு ஏற்பட்டால் ஆயுதங்களை பிரயோகம் செய்ய தயங்க கூடாது. உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஆயுதங்களை பிரயோகம் செய்ய தயங்க கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.

சிறுவர்கள் குற்றச் செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு ஏற்கனவே 52 சிறப்பு கிளப்புகள் உள்ளது. மேலும் தற்போது 82 சிறப்பு சிறார் கிளப்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மாவட்டம் தோறும் சிறுவர்களுக்கான விளையாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி, அவர்களை நல்வழிப்படுத்தி வருகிறோம். இருப்பினும் அதையும் மீறி இது போன்ற சிறுவர்கள் ஈடுபடும் சம்பவம் நடைபெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேர்தான் குற்றச் செயலில் ஈடுபட்டது என்பதற்கான வீடியோ உள்ளிட்ட 100 சதவீத ஆதாரம் உள்ளது. மேலும் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மது அருந்தி உள்ளதும் ஆதாரத்துடன் உள்ளது. ஆடு திருட்டு தானே என்று உயிரிழந்த பூமிநாதன் நினைக்காமல் குற்றத்தை தடுக்க வேண்டும் என்று கடமை ஆற்றியதால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்றார்.

Tags

Next Story