திருச்சி தில்லைநகரில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம் திறப்பு

திருச்சி தில்லைநகர் சார்பதிவாளர் அலுவலகத்தை அமைச்சர்கள் நேரு, மூர்த்தி திறந்து வைத்தனர்.
திருச்சி தில்லைநகரில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை இன்று அமைச்சர்கள் நேரு, மூர்த்தி ஆகியோர் இன்று காலை திறந்து வைத்தனர்.
திருச்சி மாநகரில் ஏற்கனவே கண்டோன்மெண்ட், டவுண்ஹால், ஸ்ரீரங்கம், உறையூர், கே சாத்தனூர், திருவெறும்பூர் ஆகிய இடங்களில் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் கண்டோன்மெண்ட் மற்றும் உறையூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவண பதிவுகள் அதிக அளவில் நடைபெற்று வருவதால் பதிவு நடவடிக்கைகளில் நெருக்கடி மற்றும் காலதாதம் ஏற்படுவதாக கூறப்பட்டது. எனவே இந்த சார்பதிவாளர் அலுவலகங்களின் பணிச்சுமையை குறைக்க இவற்றில் இருந்து எல்லைகளை பிரித்து புதிதாக ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தை உருவாக்க பதிவு துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கான புள்ளி விவர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கண்டோன்மெண்ட் மற்றும் உறையூர் சார்பதிவகங்களுக்கு உட்பட்ட சில வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக தில்லைநகரில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான எல்லைகளும் நிர்ணயம் செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
அரசாணையை தொடர்ந்து தில்லைநகர் சார்பதிவாளர் அலுவலகத்திற்காக இடம் தேர்வு நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து தில்லைநகரில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகத்தில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை அமைப்பது என முடிவு செய்யப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று காலை தில்லைநகர் சார்பதிவாளர் அலுவலகத்தை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்த விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், பழனியாண்டி, தியாகராஜன் பதிவு துறை துணை தலைவர் ராமசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu