/* */

உலக பாரம்பரிய தினத்தையொட்டி திருச்சி மலைக்கோட்டை குடைவரைக்கோவிலில் ஆய்வு

உலக பாரம்பரிய தினத்தையொட்டி திருச்சி மலைக்கோட்டை குடைவரைக்கோவிலில் ஆய்வுபணிகள் மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

உலக பாரம்பரிய தினத்தையொட்டி திருச்சி மலைக்கோட்டை குடைவரைக்கோவிலில் ஆய்வு
X

திருச்சி மலைக்கோட்டை குடைவரைக்கோவிலில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

ஏப்ரல் 18ம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் ஏப்ரல்18 உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மரபு நடை பயணம் நடைபெற்றது . இந்த நிகழ்வில் சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் வரவேற்றார். வரலாற்று மாணவர் அரிஸ்டோ துவக்க உரையாற்றினார்.

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்து பாரம்பரிய தினம் குறித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கட்டுமானங்களையும் தொன்மையான நினைவுச் சின்னங்களையும் போற்றிப் பேணுவதற்காக உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டம் 1983 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் தொடங்கி வைக்கப்பட்டது.

பழங்கால நினைவுச் சின்னங்கள் பலவும் அழியும் அபாயத்தில் உள்ளன. மக்களுக்கும் அரசுகளுக்கும் அது குறித்த விழிப்புணர்வு தேவை.உலகின் மிக முக்கிய நினைவுச் சின்னங்களை பாதுகாக்க யுனெஸ்கோ உள்ளிட்ட அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் உலக பராம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இளம் தலைமுறையினர் நாட்டின் வரலாற்று பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டும். நாட்டின் மிகப்பெரிய அடையாளமாக திகழும், மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மரபுநடை பயணமாக மலைக்கோட்டை பல்லவ குடைவரை கோயிலுக்கு சென்று பேசுகையில் திருச்சி என அழைக்கும் இந்த ஊர் தேவாரப்பாடல்களில் சிராப்பள்ளி எனக் குறிப்பிடப்படுகின்றது.

திருச்சிராப்பள்ளி பாண்டிய, சோழ, பல்லவ, ஹோய்சாள, விஜயநகர மன்னர்களாலும் பின்னர் முகம்மதிய நவாப்புகளாலும், அதன் பின்னர் ஆங்கிலேயர்களாலும் ஆட்சி செய்யப்பட்ட நகரம் ஆகும். இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகத் திகழும் திருச்சி முன்னர் சிறியதொரு நகரமாகவே காணப்பட்டது. இன்று அறியப்படாத சிறு நகராக உருமாறியிருக்கும் உறையூர் தான் முன்னர் பெரிதும் அறியப்பட்ட ஒரு நகரமாக இருந்தது. பிற்கால சோழ மன்னர்களில் சோழன் விஜயாலயன் காலம் வரை உறையூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சோழ மன்னர்கள் தஞ்சாவூர், பழையாறை,கங்கை கொண்ட சோழபுரம் என தமது தலைநகரங்களை மாற்றிக் கொண்டனர் என்பது வரலாறு.

இன்று நாம் தமிழகத்தில் காண்கின்ற கோயில் கட்டுமான அமைப்பிற்கு முன்னோடியாக இருப்பது குடைவரைக் கோயில்கள் எனலாம். இதற்கு முன்னர் மண்ணினாலும், மரத்தாலும், விரைவில் அழிந்து போகக்கூடிய வேறு பொருட்களினாலும் உருவாக்கப்பட்ட கோயில்கள் விரைவில் சேதப்படுவதற்கு ஒரு மாற்றாக குடைவரைக்கோயில்கள் எனும் அமைப்பு தமிழகத்தில் கி.பி 6 முதல் உருவாகத் தொடங்கியது எனலாம். அவ்வகையில் திருச்சியில் உள்ள கோயில்களில் குடைவரைக்கோயில்கள் என எடுத்துக் கொண்டால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரண்டு குடைவரைகள் மலைக்கோட்டை குன்று பகுதியில் உள்ளன. திருச்சி மலைக்கோட்டை தொல்பழங்கால மலைப்பாறையாகும். இந்த திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வீதியில் இடது புறத்தில் இந்தக் குடைவரைக்கோயில் அமைந்திருக்கின்றது.

மலைக்கோட்டைப் பாறையின் சரிவில் இடதுபுறத்தில் இக்குடைவரைக் கோயிலைக் காணலாம். திருச்சி மலைக்கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் இரண்டு குடைவரைக்கோயில்களில் இதுவும் ஒன்று. மலைமீது உள்ள குடைவரைக் கோவில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலமான கி.பி. 600-630ம் காலத்தில் அமைக்கப்பட்டது. ‘லலிதாங்குர பல்லவேஸ்வரகிருகம்’ என இக்குடைவரைக் கோவில் அழைக்கப்படுகிறது. லலிதாங்கு என்பது மகேந்திரவர்மனுக்கு அமைந்திருக்கும் மற்றொரு பெயராகும். இக்குடைவரைக் கோவில் சிவனுக்காக அமைக்கப்பட்டதாகும்.

கீழ் குடைவரைக்கோயில் என்று அழைக்கப்படும் இந்த குடைத்தளி மலைக்கோட்டையின் தென்புற அடிவாரத்தில் குடையப்பட்டுள்ளது. இக்கோயில் முற்கால பாண்டியர் காலம் அதாவது 8 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் முகப்பில் எண்கோணப்பட்டையுடன் நான்கு தூண்களும், பக்கவாட்டில் இரண்டு அரைத்தூண்களும் அதன் மேற்புறத்தில் பூதகணங்களும் உள்ளன. அதனைத் தொடர்ந்து செவ்வக வடிவிலான மண்டபத்தையும், கிழக்கு மற்றும் மேற்கு புறங்களில் இரண்டு கருவறைகளையும் உள்ளடக்கிய ஒரு குடைவரைக் கோயிலாக காட்சியளிக்கிறது. இதில் கிழக்குப் புற கருவறையில் விஷ்ணுவின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இம்மண்டபத்தின் வடபுறசுவரில் விநாயகர், சுப்பிரமண்யர், பிரம்மா, சூர்யா மற்றும் துர்கா ஆகிய கடவுளர்களின் உருவங்கள் மிகப்பெரிய அளவில் புடைப்புச்சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

குடைவரை செதுக்கப்பட்டுள்ள பாறைக்கு முன்புறம் திறந்த வெளி அமைந்திருக்கின்றது. குடைவறையின் முன் வாசல் பகுதியில் கோயிலைத் தாங்கிய வண்ணம் எண்கோண வடிவில் நான்கு தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களின் மேல் வரிசையாகப் பூதகணங்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கோயிலின் உள்ளே நேர் எதிராக இரண்டு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கருவறைகளுக்கு முன்னே இடது வலது பக்கங்களில் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட துவாரபாலகர்களின் புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. வலது புறத்தில் அமைந்திருக்கும் கருவரைப்பகுதியில் விஷ்ணுவின் சிற்பம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் பாதத்தில் ஒரு ஆணின் சிற்பமும் ஒரு பெண்ணின் சிற்பமும் வலது இடது பக்கங்களில் வழிபடும் பாவனையில் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை இக்குடைவரையை எடுப்பித்த மன்னனும் அவனது அரசியும் வழிபடுவதைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். இடதுபுற கருவறையில் சிற்பங்கள் ஏதும் இல்லை.

கோயிலின் வலது புற கருவறையினை அடுத்து வரிசையாகக் கணபதி, முருகன், பிரம்மா, சூரியன் ஆகிய சிற்பங்களும் கொற்றவையின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. கொற்றவையின் சிற்பத்திற்கு அடுத்து மற்றுமொரு கருவரை அமைந்திருக்கின்றது. இச்சிற்பங்களில் சிலவற்றின் முகப்பகுதி சிதைக்கப்பட்டிருப்பதையும் காணமுடிகின்றது.

இந்தக் குடைவரைக் கோவிலில் அமைந்திருக்கும் கணபதி புடைப்புச் சிற்பம், நான்கு கரங்களுடன், குட்டையான கால்களுடன் நின்ற அமைப்பில் ஆரம்பக்கால கணபதி வடிவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

இக்குடைவரையில் இருக்கும் கொற்றவை அல்லது துர்க்கையின் உருவம் முழுமைபெறாத வடிவில் உள்ளது. நான்கு கரங்களுடன் கொற்றவை காட்சி தருகின்றார். கொற்றவையின் பாதத்தில் வலது புறத்திலும் இடது புறத்திலும் இருவர் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பது போன்றும், அதில் ஒருவர் தனது தலையை ஒரு கரத்தால் பிடித்துக் கொண்டும் மறு கரத்தால் கழுத்தை வாளால் வெட்டும் வகையில் இச்சிற்பம் அமைந்துள்ளது. இது கொற்றவைக்குத் தன்னை வீரன் ஒருவன் பலி கொடுத்துக் கொள்ளும் காட்சியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இவ்வகை நவகண்ட சிற்பங்கள் குடைவரை கோயிலிற்குள் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

இதனை அடுத்து கொற்றவைக்கு வலப்புறத்தில் ஒளிவட்டத்துடன் கூடிய சூரியனின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மகர குண்டலம், கழுத்தணி என ஆபரணங்களுடன் இச்சிற்பம் உள்ளது. முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இச்சிற்பம் உள்ளது . தனது ஒரு கரத்தில் தாமரை மலரை ஏந்தியவண்னமும் மறு கரத்தில் அக்க மாலையை ஏந்தியவண்ணமும் இச்சிற்பம் அமைந்திருப்பது சிறப்பு என்றார்.

Updated On: 18 April 2024 9:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க