திருச்சியில் வட மாநில தொழிலாளர் விவரம் சேகரிப்பு- காவல் ஆணையர் தகவல்

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா.
திருச்சியில் வட மாநில தொழிலாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்று மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா கூறினார்.
திருச்சியில் நேற்று இரவு வட மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஒரு பெண் உட்பட மூன்று பேரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் திருச்சி மாநகரில் போக்குவரத்து காவல்துறை மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற வாகன விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணி காந்தி மார்க்கெட், தில்லைநகர், மாரீஸ் பாலம் வழியாக மீண்டும் சத்திரம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
அப்போது மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருச்சி நகரில் அனுமதி இன்றி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது கூடுதல் எண்ணிக்கையிலான போக்குவரத்து போலீசார் இதற்காக ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். சாலைகளில் ஆபத்தான பைக் சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தானியங்கி கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கப்படுவது குறித்த புகார்கள் தொடர்ந்து வருவதால் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் இது போன்ற குற்றச்சாட்டுகள் என வாய்ப்பில்லை.
திருச்சி மாநகரத்தில் சாலை ஓரம் மற்றும் மேம்பாலத்திற்கு அடியில் தங்கி உள்ள வட மாநிலத்தவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து சிக்னலில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிச்சை எடுப்பதும், கார் கண்ணாடிகளை சோப்பு நீர் கொண்டு அனுமதி இன்றி சுத்தம் செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu