திருச்சியில் அமலுக்கு வந்த இரவு நேர ஊரடங்கு: மொத்த வியாபாரத்திற்கு மட்டும் அனுமதி

திருச்சியில் அமலுக்கு வந்த இரவு நேர ஊரடங்கு: மொத்த வியாபாரத்திற்கு மட்டும் அனுமதி
X

பைல் படம்.

திருச்சியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. மொத்த வியாபாரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நேற்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையொட்டி திருச்சியில் இரவு 10 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன.

திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், காந்திமார்க்கெட், பாலக்கரை, உறையூர், கே.கே.நகர் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் இரவு 10 மணிக்கு மேல் போலீசார் வாகனங்களில் ரோந்து சென்றனர்.

அப்போது கட்டுப்பாடுகளை மீறி இயங்கிய சில கடைகளை மூடுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என்றும் எச்சரித்தபடி ரோந்து சென்றனர்.

ஆனால் மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் ஊரடங்கு அமலுக்கு வந்தபிறகும், கடையில் மின் விளக்குகளை அணைத்து விட்டு கடையின் கதவை(ஷட்டர்) பாதி இறக்கி வைத்து வியாபாரம் செய்தனர்.

ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் ஆகியோர் காந்திமார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது இரவு நேரத்தில் காய்கறிகள் வாங்க வரும் வியாபாரிகளை தடுக்கக்கூடாது.

சரக்கு வாகனங்களை தடை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வியாபாரிகள் தரப்பில் வைக்கப்பட்டது. இதனை ஏற்று, காந்திமார்க்கெட்டில் இரவு நேரத்தில் மொத்த வியாபாரம் மட்டும் நடத்தவும், பகல் நேரத்தில் சில்லறை வியாபாரம் நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.

Tags

Next Story