நவல்பட்டு அண்ணாநகர் வீட்டு வசதி வாரிய மனைகள் விற்பனையில் புதிய சிக்கல்
திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதி வீட்டு வசதி வாரிய மனைகள் அரசு புறம்போக்கு நிலம் என குறிப்பிடப்பட்டிருப்பதால் பத்திரப்பதிவில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக ஆக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக அவர் முதலமைச்சராக இருந்தபோது திருச்சி அருகே உள்ள நவல்பட்டு என்ற இடத்தில் புதிதாக ஒரு துணை நகரத்தை உருவாக்கினார். அதற்கு நவல்பட்டு அண்ணா நகர் என பெயரிடப்பட்டது. 1986 இல் நவல்பட்டு அண்ணா நகர் உருவாக்கப்பட்டு ஏராளமான வீடுகள் கட்டப்பட்டன.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் நவல்பட்டில் துணை நகரம் உருவாக்கப்பட்டது. தற்போது நவல்பட்டு அண்ணா நகர் துணை நகரத்தில் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் தொகுப்பு ஒன்று, தொகுப்பு இரண்டு, தொகுப்பு மூன்று சார்பில் மனைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வீட்டு வாரியம் அதாவது அரசு விற்பனை செய்யும் மனைகள் என்பதால் அரசு ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் பொதுமக்கள் இதில் மனைகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினார்கள்.
ஆனால் இந்த மனைகளை பத்திரப்பதிவு செய்வதில் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது .இந்த மனைகள் விற்பனை தொடர்பான நடவடிக்கைகள் திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் செய்யப்பட்டு வருகிறது .மனை வாங்குவதற்கு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றால் அந்த பகுதி நிலம் (சர்வே எண்310 பகுதி) முழுவதும் அரசு புறம்போக்கு நிலம் எனவும் அதனால் அதனை பத்திர பதிவு செய்ய முடியாது என திருவெறும்பூர் பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பி உள்ளனர்.
இதனால் வீட்டு வசதி வாரியத்திற்கு கடந்த சில நாட்களாக கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது .இது பற்றி வருவாய் துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது அரசு புறம்போக்கு நிலம் தான் வீட்டு வசதி வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அது தொடர்பான ஆவணங்களில் வீட்டு வசதி வாரியத்திற்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட வகைப்பாடு மாற்றங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளதால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என கூறினார்கள்.
அரசுக்கு சொந்தமான அரசு நிறுவனமான வீட்டு வசதி துறை சார்பில் விற்பனை செய்யப்படும் மனைகள் சார் பதிவாளர் அலுவலகத்தில் புறம்போக்கு நிலம் என வருவதால் ஏற்கனவே அங்கு வீடு கட்டி வசிப்பவர்களும் அதனை வாங்கவோ விற்கவோ முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் பத்திரப்பதிவு துறையும் வருவாய்த் துறையும் இணைந்து இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu