திருச்சியில் மாணவர்கள் பங்கேற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
திருச்சியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 14 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி வைத்து வாக்காளர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, 14 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, “வாக்களிப்பதே சிறந்தது - நிச்சயம் வாக்களிப்பேன்” என்ற மைய கருத்தை வலியுறுத்தும் வகையிலும், வாக்காளர்களிடையே தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கத்தோடு, விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் இன்று (24.01.2024) திருச்சிராப்பள்ளி தந்தை பெரியார் கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “வாக்களிப்பதே சிறந்தது நிச்சயம் வாக்களிப்பேன்” “மனசாட்சிபடி வாக்களியுங்கள் ஜனநாயத்தை காத்திடுங்கள்” “உங்களது எதிர்காலத்தின் குரல் உங்கள் வாக்கு” “வாக்களிப்பது நமது உரிமை. இதுவே ஜனநாயகத்தின் கடமை” “வாக்களிக்க தயார் என்பேன் எங்கள் வாக்கு விற்பனைக்கு இல்லை” என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.
இப்பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது மன்னார்புரம் ரவுண்டானா பகுதியில் தொடங்கி தந்தை பெரியார் கல்லூரியில் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி ஜமால்முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் மாணவர்களிடையே உறுதிமொழி எடுக்கப்பட்டது. இவ்வுறுதிமொழியின்போது, இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், அவர்கள் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பது மற்றும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் மாணவ,மாணவியர்கள் மத்தியில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் உரையாற்றினார்.இதில் திருச்சிராப்பள்ளி ஜமால்முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த சுமார்500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் தின உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் வாக்காளர் தின உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வுளில், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(பொது) சரண்யா, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) சீனிவாசன், பயிற்சி ஆட்சியர் ஐஸ்வர்யா, தந்தை பெரியார் கல்லூரி, ஜமால்முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu