'பெல்' ஊழியர் மனைவியை கொன்று நகை கொள்ளையடித்த பெண்ணுக்கு ஆயுள் சிறை
திருச்சி மேலகுமரேசபுரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பெல் ஊழியர் நாதமணி மனைவி சாந்தி (வயது 48). துணிவியாபாரியான இவர் அப்பகுதியில் மாதத்தவணையில் துணிகளை விற்பனை செய்து வந்துள்ளார். அந்த வகையில் அதே பகுதியை சேர்ந்த கோனார் தெரு ராமதுரை மனைவி பூங்குழலி (வயது 33) என்பவருக்கு ரூ.12 ஆயிரத்திற்கு கடன் கொடுத்துள்ளார்.
நீண்ட நாள்கள் ஆகியும் கொடுத்த கடனை பூங்குழலி தராததால் அவரிடம் சாந்தி வாக்கு வாதம் செய்துள்ளார்.இதையடுத்து பணம் தருவதாக கூறி சாந்தியை தனது வீட்டிற்கு வரவழைத்த பூங்குழலி அவரை கொலை செய்து அவரிடமிருந்து 14 பவுன் நகையை திருடினார். பின்னர் அவரது உடலை வீட்டின் பின்புறம் புதைத்து விட்டார். இதனனயொட்டி திருவெறும்பூர் போலீசார் பூங்குழலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கானது திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணைக்கு பின்பு நீதிபதி ஸ்ரீ வத்ஷன் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் 6 மாத சிறையும், திருட்டு குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் 3 மாத சிறை தண்டனையும், தடயங்களை மறைத்த குற்றத்திற்காக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் ஒரு மாதசிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதையடுத்து பூங்குழலியை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்ற போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu