லால்குடி சுகாதார பெண் ஊழியரை கொலை செய்த 2 பேருக்கு வாழ்நாள் சிறை
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா வடுகர்பேட்டை ஆரம்பசுகாதார நிலைய வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி, அங்கு ஊழியராக பணியாற்றி வந்தவர் கலாவதி (வயது 55). கடந்த 2017-ஆம் ஆண்டு இவர் பணியில் இருந்த போது, வடுகர்பேட்டை செம்மன்பாளையம் தெருவை சேர்ந்த அகஸ்டின்லியோ (21), ராமன் (21) ஆகியோர் இரட்டை அர்த்தத்தில் இவரிடம் பேசி உள்ளனர்.
இதை, அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்த கலாவதி, அவர்களை கண்டித்து வைக்கும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும், கடந்த 24-8-2017 அன்று கலாவதியின் வீட்டுக்கு சென்று, தாங்கள் கொண்டுவந்த துண்டால் அவரின் கழுத்தை இறுக்கியும், குச்சியால் அடித்தும் உள்ளனர்.
அத்துடன் விடாமல், சேலையால் அவருடைய கைகளை கட்டி, குளியல் அறைக்கு இழுத்துச்சென்று, பிளீச்சிங் பவுடரில் அவருடைய முகத்தை வைத்து அமுக்கியுள்ளனர். பின்னர் அவரை அங்கேயே அடைத்து, வெளிப்பக்கமாக தாழிட்டு சென்றுவிட்டனர். இரண்டு நாட்களுக்கு பிறகு கலாவதியின் உறவினர்கள் தற்செயலாக அங்கு வந்து பார்த்த போது, அவர் குளியல் அறையில் மயங்கி கிடந்துள்ளார்.
உடனே அவர்கள், கலாவதியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கல்லக்குடி போலீசில் மரண வாக்குமூலம் அளித்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி 29-8-2017-ஆம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, அகஸ்டின் லியோ, ராமன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் அருள்செல்வி ஆஜர் ஆனார். இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் அகஸ்டின் லியோ, ராமன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருவரும் குற்றவாளிகள் என்று நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பு கூறினார்.
அதில், இருவருக்கும், கலாவதி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவருடைய உயிருக்கு ஆபத்தை விளைவித்த குற்றத்துக்காக 3 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், கலாவதியை குளியல் அறையில் அடைத்து சிறைவைத்த குற்றத்துக்காக ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும், அவரை கொலை செய்த குற்றத்துக்காக வாழ்நாள் முழுவதும் (ஆயுள்) சிறை தண்டனையும் விதிப்பதாக கூறியிருந்தார். அத்துடன், இந்த தண்டனைகளை அவர்கள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டு இருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu