திருச்சியில் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 'டுபாக்கூர்' போலீஸ் கைது

திருச்சியில் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற டுபாக்கூர் போலீஸ் கைது
X

திருச்சியில் கைது செய்யப்பட்ட டுபாக்கூர் போலீஸ் கார்த்திக்

திருச்சியில் மோட்டார் சைக்கிளை பறித்துச்சென்ற டுபாக்கூர் போலீசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி திருவெறும்பூர் பெல் நகர் கலைஞர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 63). இவர் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயம் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் அருகே அவரது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சீருடை அணியாத நபர் ஒருவர் நான் போலீஸ் என கூறி ஏன்? போக்குவரத்து சிக்னலை மீறி நிற்காமல் வருகிறாய்? வண்டியை நிறுத்து என கூறியுள்ளார். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை நான் கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்கிறேன். நீ நாளை காலை வந்து மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை கொண்டு வந்து காட்டி விட்டு வண்டியை பெற்றுக் கொள் என்று கூறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து நேற்று கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதனிடம் ராஜ்குமார் நேரில் சென்று ஆவணங்களுடன் புகார் கொடுத்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் போலீஸ் போல் நடித்து மோட்டார் சைக்கிளை பறித்து சென்றது உறையூர் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கார்த்திக் (வயது40) என்பது தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த பைக்கை மீட்டனர். பின்னர் கார்த்திக்கை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story