திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தின் மாதிரி வரைபடம் வெளியீடு
பஞ்சப்பூரில் அமைய உள்ள பேருந்து நிலையத்தின் மாதிரி வரைபடம்
திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தின் மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க திட்டமிட்டு இடங்கள் சமன்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. ஒரே நேரத்தில் 350 பஸ்களை நிறுத்தி வைக்கும் வசதியுடன், தனியாக டாக்ஸி ஸ்டாண்ட், ஆம்னி பஸ்களுக்கான நிறுத்தம், ஓட்டல்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அமைய உள்ளன.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்போல, பஸ் நிலையத்தை ஒட்டியே மொத்த மற்றும் சில்லரை காய்கறி மார்க்கெட்டும் அமைய உள்ளது.
இன்று அடிக்கல் நாட்டு விழா :
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி பல்வேறு திடப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.832 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மட்டும் 48 ஏக்கர் பரப்பளவில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் அரசின் உட்கட்டமைப்பு மற்றும் வசதி நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் இதர பணிகளான கனரக சரக்கு வாகன முனையம் 25 ஏக்கர் பரப்பளவிலும், சாலைகள், மழைநீர் வடிகால், இதர உட்கட்டமைப்பு வசதிகள், பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் திட்ட மதிப்பீடு ரூ.210 கோடியினை சீர்மிகு நகர திட்ட நிதியில் இருந்து மேற்கொள்ளவும் அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மாதிரி வரைபடங்கள் மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு வரைபடத்தை மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. அந்த மாதிரி வரைபடம் நேற்று மாநகராட்சி நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது.
மேலும் முதற்கட்டமாக என்னென்ன திட்டப்பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளதாவது:-
ஒருங்கிணைந்த பஸ் முனையம் அமைக்க ரூ.140 கோடி, கனரக சரக்கு வாகன முனையம் அமைக்க ரூ.76 கோடி, சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிக்காக ரூ.75 கோடி, பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் அமைக்க ரூ.59 கோடி என ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu