திருச்சியில் இந்த வழித்தடங்களில் தான் மெட்ரோ ரயில் ஓடப்போகிறது
![திருச்சியில் இந்த வழித்தடங்களில் தான் மெட்ரோ ரயில் ஓடப்போகிறது திருச்சியில் இந்த வழித்தடங்களில் தான் மெட்ரோ ரயில் ஓடப்போகிறது](https://www.nativenews.in/h-upload/2024/03/26/1882813-metro.webp)
திருச்சியில் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதற்கான 3 வழித்தடங்களின் வரைபடம்.
தமிழகத்தில் தற்போது சென்னை மாநகரில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாநகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்க வேண்டும் என்பது அங்கு வசிக்கும் மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.
இதனை ஏற்ற மத்திய அரசு முதற்கட்டமாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்தது. கோவையில் அந்த அறிக்கையின் அடிப்படையில் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு மெட்ரோ ரயில் சேவைக்கான வாய்ப்புகள் கோவையில் அதிகம் உள்ளதாக அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். அதனை தொடர்ந்து அங்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான பூர் வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல மதுரையிலும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அதற்கும் மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
அதேபோன்று தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு எந்தெந்த வழித்தடங்களில் வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றி அதிகாரிகள் குழுவினர் வந்து ஆய்வு நடத்தி விட்டு சென்றனர் இந்த ஆய்வின் அடிப்படையில் திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 3 வழித்தடங்கள் வழியாக திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இதன்படி சமயபுரம் முதல் வயலூர் வரை 18 கிலோமீட்டர் நீளத்திற்கும், துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 26 கிலோமீட்டர் தூரத்திற்கும், திருச்சி ஜங்ஷன் முதல் பஞ்சப்பூர் வரை 23.3 கிலோமீட்டர் தூரத்திற்கும் ஆகிய மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் திருச்சி ஜங்ஷன் - பஞ்சப்பூர் மெட்டரோ ரயில் மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், ஆவின் பால் பண்ணை, விமான நிலையம், பசுமைநகர், குண்டூர், மாத்தூர்,குமார மங்கலம், ஓலையூர், கே சாத்தனூர், ஆகிய வழித்தடத்தில் இயக்கப்படும்.
பஞ்சப்பூர்-துவாக்குடி மெட்ரோ ரயில் எடமலைப்பட்டி புதூர், ஜங்ஷன், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர் பாலக்கரை, வரகனேரி, பழைய பால் பண்ணை, அரியமங்கலம், மலையப்ப நகர், சக்தி நகர், பாலாஜி நகர், திருவெறும்பூர், கணேசாபாய்ண்ட், ஜிபிடி, என்ஐடி வழியாக இயக்கப்படும்.
சமயபுரம் -வயலூர் மெட்ரோ ரயிலானது பழூர், நெம்பர் ஒன் டோல்கேட், ஸ்ரீரங்கம், மாம்பழச்சாலை, சிந்தாமணி, சத்திரம் பஸ் நிலையம், மெயின்கார்டு கேட், மேலப்புலிவார்டு ரோடு, காந்திமார்க்கெட், தென்னூர், புத்தூர் நால்ரோடு, பிஷப் ஹீபர் கல்லூரி, சீனிவாசநகர், உய்ய கொண்டான் திருமலை, வாசன்சிட்டி, நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை வழியாகவும் இயக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை என்பது திருச்சி மாநகர மக்களின் நீண்ட கால கனவு திட்டமாகும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் திருச்சி மாநகர மக்களின் கனவு நனவாகும். மேலும் மெட்ரோ ரயில் சேவைக்காக அந்த வழித்தடங்களில் புதிய ரயில் நிலையங்களும் அமைக்கப்படும் என்பதால் திருச்சி நகரின் தோற்றமே முற்றிலுமாக மாறும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய பணிகள் விரைவாக முடிவடைந்து ஜூன் மாதம் இந்த பஸ் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் மெட்ரோ ரயில் சேவையும் வந்து விட்டால் திருச்சி நகரின் வளர்ச்சியானது அபரிமிதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu