மக்களின் கோரிக்கை ஏற்று ஆய்வு பணி தொடங்கினார் திருச்சி மேயர் அன்பழகன்
திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்க பகுதியில் ஆய்வு பணி மேற்கொண்டார் மேயர் அன்பழகன்.
திருச்சி மாநகராட்சி மேயராக மு.அன்பழகன் கடந்த 4ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்ற நாளில் இருந்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளும், பொதுநல அமைப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் மேயர் அன்பழகன் முதல் குறைதீர் கூட்டத்தை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடத்தினார். அப்போது திருச்சி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது வார்டு சம்பந்தபட்ட குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். அவற்றில் மிக முக்கியமாக திருச்சி ஜே. கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்க தலைவர் திருஞானம் நிர்வாகிகளுடன் சென்று மழைக்காலத்தில் கொட்டப்பட்டு குளத்து நீர் நகருக்குள் புகுந்ததால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய கோரி மனு அளித்தார்.
இந்த மனு மீது மேயர் அன்பழகன் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் உறுதியளித்தார். அத்துடன் ஆய்வு பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .
இதனை தொடர்ந்து முதல் வேலையாக இன்று காலை திருச்சி ஜே. கே. நகர் விரிவாக்க பகுதிக்கு மேயர் அன்பழகன் வந்தார்.அவருடன் ஆணையர் முஜிபுர் ரகுமான் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், 61 -வது வார்டு கவுன்சிலர் ஜாபர் அலி ஆகியோரும் வந்திருந்தனர்.
கொட்டப்பட்டு குளத்தை பார்வையிட்ட மேயர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் குளத்து நீரால் மீண்டும் ஜே.கே.நருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மக்கள் தெரிவித்த கோரிக்கையை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
அப்போது ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் தங்கள் பகுதியில் மழைநீர் வடிகால் வசதிகள் முறையாக இல்லை. அதனை சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனையும் உடனடியாக தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.
முன்னதாக திருச்சி கே. கே. நகர் தங்கையன் நகர் பகுதியிலும் மேயர் அன்பழகன் ஆய்வு செய்தார். குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்தியதோடு உடனடியாக ஆய்வுப் பணியையும் தொடங்கி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறார் மேயர் அன்பழகன். அவரது மின்னல் வேக பணியை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu