மளிகை கடைக்குள் புகுந்து பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 வருடம் சிறை

மளிகை கடைக்குள் புகுந்து பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 வருடம் சிறை
X

தண்டனை விதிக்கப்பட்ட பிரான்சிஸ்.

மளிகை கடைக்குள் புகுந்து பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 வருடம் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மளிகைக் கடைக்குள் புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயன்ற நபருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சி தெற்கு காட்டூர் ராஜவீதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் சவரி முத்து. இவர் அம்மன் நகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி எழிலரசி. இந்த தம்பதியினருக்கு ஜூலியன் ஜோ, பிராங்க்ளின் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் பள்ளியில் படித்து வருகிறார்கள். எழிலரசி தனது கணவர் நடத்தும் மளிகை கடையில் அவருக்கு உதவியாக அவ்வப்போது வேலை செய்து வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த 30 -12 -2021 அன்று மதியம் 3 மணி அளவில் கணவரை சாப்பிட வீட்டுக்கு அனுப்புவதற்காக கடைக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடையில் வந்து ஒரு பொருள் கேட்டார். அதை அவர் எடுத்துக் கொடுப்பதற்காக கடைக்குள் சென்றபோது உள்ளே புகுந்த அந்த நபர் எழிலரசியின் நகைகளை கழற்றி கொடுக்கும்படி கத்தி முனையில் மிரட்டினார். அவர் கொடுக்க மறுக்கவே கன்னத்திலும் கழுத்திலும் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த எழிலரசி சத்தம் போடவே பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

படுகாயம் அடைந்த எழிலரசியை பக்கத்து வீட்டில் வசித்த மகேஷ் என்ற நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இது தொடர்பாக எழிலரசி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் எழிலரசியை கத்தியால் குத்தி நகையை பறிக்க முயன்ற நபரின் பெயர் பிரான்சிஸ் (வயது 37 )வடக்கு காட்டூர் மூன்றாவது தெரு பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் என தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.பின்னர் அவர் மீது திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிவுற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரான்சிஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் அவருக்கு ஏழு வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மீனா சந்திரா தீர்ப்பளித்தார்.

மேலும் பிரான்சிஸ் பாதிக்கப்பட்ட எழிலரசிக்கு நஷ்ட ஈடாக 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் எஸ். ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!