திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.7.32 கோடிக்கு மது விற்பனை
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 187 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் 105 மதுக்கடைகளில் பார் வசதி உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ. 3 கோடி முதல் ரூ.4 கோடி வரை மது விற்பனை நடைபெறும். அதுவே பண்டிகை நாட்கள் கூடுதல் வருவாய் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கிடைக்கும். பொங்கல், தீபாவளி, புத்தாண்டு ஆகிய பண்டிகை நாட்களில் ரூ. 4 கோடி முதல் ரூ.6 கோடி வரை மதுபானங்கள் விற்பனை நடைபெறும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு என்பதால் நேற்றே மதுப்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுபாட்டிகளை வாங்கி வீட்டில் ஸ்டாக் வைக்க ஆரம்பித்தனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நேற்று மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
ஒரு சில இடங்களில் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு விருப்பமான மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளை வாங்கிச் சென்றனர். இன்று ஊரடங்கு என்பதால் நேற்று திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ. 7 கோடியே 32 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் மது விற்பனை விவரம் வருமாறு; தமிழகத்தில் நேற்று ஒருநாள் மட்டும் ரூ.218 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதன்படி சென்னை மண்டலம்- ரூ.50.04 கோடி, மதுரை மண்டலம்-ரூ.43.20 கோடி. திருச்சி மண்டலம்- ரூ.42.59 கோடி, கோவை மண்டலம்- ரூ.41.28 கோடி. சேலம் மண்டலம்- 40.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ. 7 கோடியே 32 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu