திருச்சியில் அஞ்சல் அட்டையில் 750 வினாடிகளில் கடிதம் எழுதும் நிகழ்ச்சி
திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளியில் கடிதம் எழுதி அதனை போஸ்ட் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், தென்னூர் நடுநிலைப்பள்ளி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில்75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு75 சுதந்திர போராட்டவீரர்கள் குறித்து75 நூலக வாசகர்கள்75 அஞ்சல் அட்டையில்750 வினாடியில் கடிதம் எழுதும் நிகழ்ச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் விமலா வரவேற்றார்.
புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டத்தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் நன்மாறன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் பங்கேற்று நிகழ்ச்சியினை துவக்கி வைக்க மாணவர்கள் 750 வினாடியில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறிப்பினை எழுதியும் தேசிய சின்னங்கள் வரைந்தும் கடிதத்தினை அஞ்சல் பெட்டியில் செலுத்தினர்.
இந்நிகழ்வு குறித்து புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டத்தலைவர் விஜயகுமார் கூறுகையில்,காலத்தின் சுழற்சியால் கடிதங்கள் தற்போது காட்சிப் பொருளாகி வருகிறது. இது மொழியின் விழிகளை ஒளி இழக்கச் செய்யும் மாற்றத்திற்கான முன்னோட்டமாக உள்ளது.கணினி யுகத்தில் கருத்து பரிமாற்றங்களுக்கு இணையதளம், அலைபேசி,முகநூல், வாட்ஸ்அப்என நம் முன் உள்ளன.
இவை கடிதங்களின் அவசியத்தை குறைத்துவிட்டாலும், அதன் வரலாறும், பெருமைகளும் அளப்பரியது.பழங்காலத்தில் புறாவின் காலில் கட்டி அனுப்பப்பட்ட தூது, கடிதங்களுக்கான ஆரம்பமாகும். ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் உலகம் முழுவதும் பரந்து விரிந்த 18ம் நூற்றாண்டில், தகவல் பரிமாற்றத்திற்கு ஒரு பொது முறை இருக்க வேண்டும் என்பதற்காக தபால் தலைகளை அறிமுகப்படுத்தினர். இந்தியாவில் 1854ம் ஆண்டு முதல் தபால்தலை வெளியிடப்பட்டு, கடித போக்குவரத்து தொடங்கியது.ஒவ்வொரு கடிதத்தை கொண்டும், அதன் வரலாற்றை எடுத்துரைக்கலாம்.
தேச தந்தை மகாத்மா காந்தி, கடிதம் எழுதும் பழக்கத்தை தன் வாழ்நாளில் கடைசி வரையில் விடவில்லை. அவரின் கடிதங்கள், பொக்கிஷங்களாக பல்வேறு அருங்காட்சியகங்களில் இப்போதும் இருக்கின்றன. அவர், கடிதங்களில் தெரிவித்த கருத்துகள், நாட்டின் சுதந்திர வேட்கையை மக்களிடம் விதைத்தது. இதனால் தான், காந்தியின் படத்தை கொண்டு, இந்தியா மட்டுமல்லாமல், உலகில் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளில் தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கால்அணா, அரை அணா, ஒரு அணா என அஞ்சல் அட்டைகள் உருவாக்கி, இன்றைக்கு 50 பைசா அஞ்சல் அட்டையாக இருக்கிறது. இதேபோல், அஞ்சல் உறை மற்றும் இன்லேண்ட் லெட்டர் ஆகியவையும் நடைமுறையில் இருக்கிறது. கடிதம் எழுதுவது என்பது, தனி சிறப்பு வாய்ந்ததாகும். ஒருவரை நலம் விசாரிப்பதோடு, இங்கு நடக்கும் நிகழ்வுகளை அப்படியே பதிவிட்டு, அதிலும் தனது தாய் மொழியில், பேச்சு நடைமுறை வார்த்தைகளை பதிவு செய்வது காலத்திற்கும் நிலைத்து நிற்கும். முடிவில் நூலகர் புகழேந்தி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu