திருச்சி பகுதியில் 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை

திருச்சி பகுதியில் 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
X
திருச்சி பகுதியில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய அளவிலான அரசு பொது விடுமுறை நாட்களில் வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை விடவேண்டும், அல்லது தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கவேண்டும் என்பது தொழிலாளர் நல சட்ட விதியாகும்.

அந்த வகையில் தேசிய பண்டிகை விடுமுறை தினமான நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை தொழிலாளர் ஆணையரும், முதன்மைச் செயலாளருமான அதுல் ஆனந்த், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் மற்றும் திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் திவ்யநாதன் ஆகியோரது அறிவுரையின்படி திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்)தலைமையில், தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்கள் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 147 நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.

இதில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத மற்றும் தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, இரட்டிப்பு சம்பளம்அல்லது மாற்று விடுமுறை அளிக்காத 106 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இனிவரும் தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களை பணிபுரிய நிர்பந்திக்கும் நிறுவனங்கள் மீது 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும்பண்டிகை விடுமுறை) சட்டத்தின் கீழ் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai future project