முடிந்தது குமாரமங்கலம் ரயில்வே மேம்பால பணி: துவங்கியது ரிங் ரோடு போக்குவரத்து
குமாரமங்கலம் ரயில்வே மேம்பால பணி முடிவடைந்ததால் இனி பஞ்சப்பூரிலிருந்து தஞ்சாவூருக்கு ரிங் ரோட்டில் வாகனங்களில் எளிதாக செல்லலாம்.
திருச்சி மாநகரில் உள்ள போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் சாலையில் அசூர் எந்த இடத்தில் தொடங்கி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை, மதுரை தேசிய நெடுஞ்சாலை, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை கடந்து திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் ஒரு ரிங் ரோடு திட்டம் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
விவசாயிகள் போராட்டம் ,நிலம் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனைகள் ,ஆட்சி மாற்றம் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த சாலை அமைக்கும் பணி பத்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது .அதன் பின்னர் பஞ்சப்பூரில் இருந்து துவாக்குடி வரையிலான அரை வட்டச் சாலையின் ஒரு பகுதியில் மட்டும் பணிகள் நடைபெற்று முடிவடைந்தன. இந்த பணியிலும் குமாரமங்கலம் என்ற இடத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டி இருந்ததால் ரயில்வே இலாகாவின் அனுமதி பெற வேண்டி இருந்தது. நீண்ட இழுபறிக்கு பின்னர் ரயில்வே இலாகா பாலம் கட்டுவதற்கு அனுமதி கொடுத்தது. சுமார் ஓர் ஆண்டு காலமாக அந்த பணி நடந்து வந்தது.
இந்நிலையில் தற்போது குமாரமங்கலம் ரயில்வே மேம்பால பணி முடிவடைந்துள்ளது. பொது மக்களின் பயன்பாட்டுக்கு பாலம் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதியில் இருந்து தஞ்சாவூர் செல்ல வேண்டியவர்கள் திருச்சி நகருக்குள் வர வேண்டிய தேவையில்லை. கார் லாரி உள்பட அனைத்து வாகனங்களும் பஞ்சப்பூரிலிருந்து ஓலையூர் சந்திப்பு சாலை வழியாக குமாரமங்கலம் ரயில்வே பாலத்தில் ஏறி புதுக்கோட்டை சாலையை கடந்து நேராக தஞ்சாவூர் சாலையை அசூர் டோல் ப்ளாசா அருகில் சென்றடைய முடியும்.
இதன் காரணமாக திருச்சி நகருக்குள் வாகன போக்குவரத்து நெருக்கடி குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 16 ஆண்டு காலத்துக்கு பின்னர் திருச்சி ரிங் ரோட்டின் ஒரு பகுதி மட்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பஞ்சப்பூரிலிருந்து கரூர் சாலையை இணைக்கும் சுமார் 17 கிலோ மீட்டர் நீளத்திற்கு அரை வட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணிக்காக நிலம் எடுக்கும் பணி முடிவடைந்து டெண்டர் விடும் நிலையில் உள்ளதால் விரைவில் அந்த பணியும் தொடங்கி முடிவடைந்தால் நகருக்குள் வராமலேயே கரூர் மற்றும் கோவை சாலையையும் வாகன ஓட்டுனர்கள் எளிதாக அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu