திருச்சி மலைக்கோட்டையில் கார்த்திகை தீபத்திற்காக 300 மீட்டர் திரி தயார்
திருச்சி மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக 300 மீட்டர் திரி தயார் நிலையில் உள்ளது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வரும் 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் 273 அடி உயரம், 417 படிகள் கொண்ட மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு உள்ள கார்த்திகை தீப கோபுரத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதற்காக இன்று பூர்வாங்க பூஜை செய்து, தீபம் ஏற்றுவதற்கான மெகா திரியை தயார் செய்து கார்த்திகை தீப கொப்பரையில் வைத்து எண்ணெய் ஊற்றும் பணி இன்று தொடங்கியது. இதற்காக 300 மீட்டர் நீளமுள்ள பருத்தித் துணியால் பிரம்மாண்ட திரி தயாரிக்கப்பட்டது. இந்த திரியை தயார் செய்து, ஒரு கட்டு போல் கட்டி கொப்பரையில் இன்று வைக்கப்பட்டது.
இந்த பிரம்மாண்ட திரியை தாயுமான சுவாமி சன்னதி பகுதியில் உள்ள கொடிமரத்துக்கு அருகில் தயாரித்து கயிறு கட்டி மேலே தூக்கி சென்றனர். பின்னர் பூர்வாங்க பூஜைக்கு பின்னர் கொப்பரையில் திரி வைக்கப்பட்டது. பின்னர் இந்த பிரம்மாண்ட திரி வைக்கப்பட்ட கார்த்திகை தீப கொப்பரையில் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணை, நெய் ஆகியவை கலந்து 900 லிட்டர் ஊற்றப்பட்டது.
கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்படும் இந்த மகா தீபம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எரியும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி, பேஸ்கார் வேலாயுதம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu