திருச்சியில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தவர் கைது

திருச்சியில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தவர் கைது
X
திருச்சியில், வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்தனர்.

திருச்சி சுந்தர் நகர், ரங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திருச்சி புத்தூர் திருவிக நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லணை குணா என்கிற நாகராஜன் (வயது45). கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு, திருச்சியில் மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளர் பணியிடம் ஒன்று காலியாக இருக்கிறது. அந்த பணியானது எனக்கு தெரிந்தவர் மூலமாக யாருக்காவது வேலை வாங்கிக் கொடுக்கலாம் என்று, செந்தில்குமாரிடம் குணா கூறியுள்ளார். மேலும், பணம் ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும் என்று, அவரிடம் குணா பேரம் பேசியுள்ளார்.

அதற்கு செந்தில்குமார், தனது உறவினர் மகன் சிவகுமார் என்பவருக்கு அந்த வேலையை வாங்கி கொடுத்து விடுங்கள்; பணத்தையும் தந்து விடுகிறோம் என்று ஒப்புக் கொண்டுள்ளார். அதைத்தொடர்ந்து செந்தில்குமார், 2017-ஆம் ஆண்டு ரூ.12 லட்சத்தை, மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளர் பணிக்காக குணாவிடம் கொடுத்துள்ளார். குணா, இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, பணத்துடன் தலைமறைவானார். செந்தில்குமார் குணாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, விரைவில் வேலையை வாங்கித் தருகிறேன் என்று, மூன்று வருடமாக அலைக்கழித்துள்ளார்.

ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செந்தில்குமார். திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் உதவி ஆணையர் சின்னசாமி, இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், நேற்று மாலை திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்த குணாவை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story