கார்மல் நிறுவன பள்ளியில் தண்ணீர் சிறார் சுற்றுச்சூழல் கிளப் துவக்கம்
திருச்சி கார்மல் நிறுவன பள்ளியில் சிறார் சுற்றுச்சூழல் கிளப் தொடங்கப்பட்டது.
கார்மல் கல்வி நிறுவனங்களின் பள்ளியில் தண்ணீர் சிறார் சுற்றுச்சூழல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேம்குமார் தலைமை வகித்தார்.தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம், பாக்கியா ஜோதி தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.தண்ணீர் அமைப்பு செயலாளர் கலைக் காவிரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் சிறப்புரையாற்றினார்.
சிறப்புரையில் வளரும் தலைமுறைக்கான நீர்நிலைகள், வனங்கள், வளங்கள், யாவும் சிதைக்கப்பட்டு வருவது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். குழந்தைகளுக்கான வாழ்வை, பூவுலகை, சூழல் வளங்களை அவர்களுக்கு வழங்க வேண்டியது நமது அடிப்படை கடமையாகும். நல்ல உணவை, நமது பாரம்பரிய நெல்மணிகளை, விதைகளை, மரங்களை, கனிகளை அறிமுகப் படுத்தி வளர்த்தெடுக்க சிறார்களுக்கு கற்றுத்தருதல் வேண்டும். நம்மைச் சுற்றிலும் வாழும் பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகள், அவைகள் இயற்கைக்கு செய்யும் நன்மைகள், தட்பவெப்பங்களை சிற்றுயிர் தொடங்கி பேருயிர் வரை அறிந்து கொண்டு அதனோடு இணைந்து செயல்படும் நுட்பங்களை நாம் உணர்ந்து கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம், நிலத்தடி நீர், ஓடைநீர், ஆற்றுநீர், வாய்க்கால் நீர் யாவற்றையும் வரையறையின்றி சுரண்டாமல், மாசுபடுத்தாமல் நம் முன்னோர்கள் பாதுகாத்ததன் வழிநின்று பாதுகாத்திட வேண்டும் என்றார்.
நாளுக்கு நாள் பெருகிடும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து துணிப்பைகளை பயன்பாட்டுக்கு எடுக்க வேண்டும் என்றார்.துணிப்பை எடுப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்வை விலங்கியல் ஆசிரியர், சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் டி.கவிதா, தீபா ஒருங்கிணைத்தார்கள்.ஆசிரியர் வல்லரசு நன்றி கூறினார்.ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.முன்னதாக மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து சிறார்களின் மவுன நாடகம் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu