திருச்சியில் நவீன காவல் சோதனை சாவடி மைய கட்டிடம் திறப்பு
திருச்சியில் நவீன காவல் சோதனை சாவடியில் புதிய கட்டிடத்தை மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்.
திருச்சி மாநகரம் அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வயலூர் ரோட்டில் காவல் சோதனை சாவடி எண் 8 அமைக்கப்பட்டு பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் வயலூர் ரோடு சாலை விரிவாக்கத்திற்கு பின்னர் புதியதாக காவல் சோதனை சாவடி எண் 8 அமைப்பதற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி இடம் தேர்வு செய்யப்பட்டு புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
இந்த சோதனை சாவடி கட்டிடத்தில் வயலூர் வழியாக திருச்சி மாநகருக்குள் வரும் மற்றும் மாநகரிலிருந்து வெளியேறும் வாகனங்களை பதிவு செய்யும் விதமாக இரண்டு நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் எந்த ஒரு தகவலையும் உடனடியாக தெரிவிக்க விஹெச்எப் மைக் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சோதனை சாவடியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் தணிக்கை செய்யவும் சாலையில் விபத்துகளையும் வாகனங்களையும் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் சாலையில் ஒளிரும் ஸ்டிக்கர்களுடன் கூடிய இரும்பு தடுப்பான்களுடன் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
இந்த நவீன காவல் சோதனைச் சாவடி எண் 8ன் புதிய கட்டிடத்தை இன்று மார்ச் 4ஆம் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தொடங்கி வைத்தார். சுழற்சி முறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன தணிக்கை செய்யப்படும். இந்த நவீன காவல் சோதனை சாவடி எண் எட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளதால் திருச்சி மாநகருக்குள் உள்ளே வரும் வாகனங்கள் மற்றும் வெளியேறும் வாகனங்களை தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டு குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை வாகன சோதனை மூலம் பிடிக்கவும் சட்டவிரவாத செயல் நபர்களை கண்காணிக்கவும் அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உயர்கொண்டான் திருமலை, குமரன் நகர், வாசன் சிட்டி குழுமிக்கரை ஆகிய இடங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க ஏதுவாக அமைந்துள்ளது என மாநகர காவல் ஆணையர் காமினி அப்போது தெரிவித்தார்.
திருச்சி மாநகரத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகருக்குள் வரும் வாகனங்களையும் மாநகரை விட்டு வெளியேறும் வாகனங்களையும் தணிக்கை செய்வதற்காக திருச்சி மாநகரின் எல்லைகளை சுற்றி மொத்தம் 9 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu