திருச்சியில் தொழிற்சங்கத்தினர் மறியல்-போலீசாருடன் தள்ளுமுள்ளு
திருச்சியில் தொழிற்சங்கத்தினர் நடத்திய மறியல் போராட்டத்தில் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்,பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் மாபெரும் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின் படி அனைத்து தொழிற்சங்கங்களின் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரை தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும் அரசியல் கட்சிகளின் ஆதரவு தெரிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று பொதுப் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படாத வகையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போன்றவற்றை நடத்தினர்.
தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றாலும் பஸ் போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருந்தது ஆட்டோக்களும் அதிக அளவில் ஓடவில்லை கடைகள் வழக்கம் போல திறந்து வைக்கப் பட்டு இருந்தன.
திருச்சியில் இன்று மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமையில் ஏ.ஐ.டி.யு.சி. ஐ.என்.டி.யு.சி. மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் கையில் கொடிகளுடன் திரண்டு வந்தனர். அவர்களை ஜங்சன் ரயில் நிலைய வாசலில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து தொழிற்சங்கத்தினர் ரயில் நிலையம் முன்பாக தரையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள்.ஒரு கட்டத்தில் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இந்த மறியல் போராட்டம் திருச்சி ஜங்சன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu