திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயர்மட்ட மேம்பாலம்- அமைச்சர்கள் தகவல்

திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயர்மட்ட மேம்பாலம்- அமைச்சர்கள் தகவல்
X

திருச்சி -திண்டுக்கல் சாலை அகலப்படுத்தும் பணியை  துவக்கி வைத்து அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரக்கன்றுகள் நட்டினர்.

திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என அமைச்சர்கள் தகவல் தெரிவித்தனர்.

திருச்சி - திண்டுக்கல் சாலையில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 74.80 கோடி மதிப்பிலான நான்கு வழித்தட சாலைப் பணியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று(03.05.2022) தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேசும்போது


தொடர்ந்து 10 ஆண்டுகாலமாக முடிக்கப்படாமல் உள்ள அரிஸ்டோ மேம்பாலத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் பணி தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பால்பண்ணை ரவுண்டானா முதல் துவாக்குடி வரையிலான உயர்மட்ட சாலை அமைப்பது தொடர்பாக நேரில் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், மேலும் தமிழக முதல்வர் அறிவித்த புதிய காவிரி பாலம் கட்டுதல், ஏற்கனவே உள்ள காவிரி பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள், அண்ணாசிலை முதல் குடமுருட்டி வரை உயர்மட்ட சாலை அமைத்தல், குடமுருட்டி கரையில் சாலை அமைத்தல், தலைமை தபால் நிலையம் முதல் நீதிமன்றம் ரவுண்டானா வரையிலான உயர்மட்ட சாலை அமைத்தல் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு விரைவில் திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு. பேசும்போது


முதலமைச்சரின்அறிவிப்பின்படி முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் 32 பணிகள் இந்த நிதியாண்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் முதல் பணியாக தற்போது திருச்சிராப்பள்ளியில் இப்பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்தும், நிலுவையில் உள்ள அரிஸ்டோ மேம்பாலப் பணிகளை தொடங்கிடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதனைத் தொடர்ந்து, திருச்சியில் நீண்ட நாட்களாக பணிகள் முடிவு பெறாமல் உள்ள அரிஸ்டோ மேம்பாலப் பணியான திருச்சிராப்பள்ளி - சென்னை செல்லும் சாலையை இணைக்கும் மேம்பாலப்பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

பின்னர் பால்பண்ணை ரவுண்டானா முதல் துவாக்குடி வரையிலான உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாகவும், காவிரி பாலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பராமரிப்புப் பணிகளையும் மற்றும் புதிதாக அமையவுள்ள காவிரி பாலம் தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அண்ணாசிலை முதல் மல்லாட்சிபுரம் (குடமுருட்டி) வரையிலான உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் குறித்தும், குடமுருட்டி கரைப்பகுதியில் சாலை அமைத்தல் குறித்தும் நீதிமன்றம் ரவுண்டானா முதல் தலைமை தபால் நிலையம் வரையிலான உயர்மட்ட சாலை அமைத்தல் குறித்தும் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடா;ந்து, மாவட்ட ஆட்சியரகத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள், அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று திட்டங்களின் செயலாக்கம் குறித்து ஆலோசனைகளை வழங்கிப் பேசினர்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சித் தலைவர்சிவராசு, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர்கள் சந்திரசேகர்,பாலமுருகன், கண்காணிப்புப் பொறியாளர்கள் கிருஷ்ணசாமி, சீனிவாசராகவன், வணக்கத்திற்குரிய மேயர் மு.அன்பழகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!