திருச்சியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: மரங்கள் விழுந்து பாதிப்பு

திருச்சியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையால் மரம் ஆட்டோ மீது விழுந்து கிடக்கும் காட்சி.
திருச்சியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெப்பம் மிக கொடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு காரணம் ஆர்டிக் ,அண்டார்டிகா பகுதிகளில் பணிப்பாறைகள் உருகி கடலுடன் கலப்பது, மேலும் இயற்கைக்கு எதிராக மக்கள் அதிகமாக பயன்படுத்தும் சாதனங்களால் ஏற்படும் உஷ்ணம், ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை போன்ற பல்வேறு காரணங்களால் வெப்பநிலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து சென்ற வண்ணம் உள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு கோடைகாலம் இன்னும் முறையாக தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரி செல்சியஸ் ஐ தாண்டி உள்ளது. குறிப்பாக கரூரில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக 103 டிகிரி வெயில் அடித்து உள்ளது. தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியும் வெயிலால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
திருச்சியில் கடந்த ஒரு வார காலமாகவே வெயில் 100 டிகிரி அளவுக்கு அடித்தது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். வீட்டிலும் இருக்க முடியாமல் கதவு ஜன்னல்களை திறந்து வைத்த படி காற்றோட்டத்தை தேடினார்கள்.
இந்த நிலையில் திருச்சியில் இன்று காலையில் இருந்தே வெயில் கொளுத்தியது. இந்நிலையில் திடீரென மாலை 5 மணி அளவில் திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுமார் அரை மணி நேரம் அளவிற்கு மட்டுமே அந்த மழை பெய்தாலும் திருச்சி நகரின் பல பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது.
காற்றுடன் சேர்ந்து பலத்த மழை பெய்ததால் நகரின் பல பகுதிகளில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. தில்லை நகர் 5வது குறுக்கு தெரு செங்குளம் கோவில் அருகில் ஒரு பெரிய மரம் சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் விழுந்ததில் ஒரு ஆட்டோ சேதம் அடைந்தது.
மேலும் மின்கம்பங்களும் அறுந்துள்ளன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது. இதேபோல நகரின் பல பகுதிகளிலும் மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன. தில்லை நகர் பகுதியில் மரம் விழுந்தது பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு வந்தனர். மாநகராட்சி அதிகாரிகளும் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சாலையில் விழுந்து கிடந்த மரங்களை துண்டு துண்டாகி வெட்டி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த மழையால் திருச்சி நகரில் சிறிது நேரம் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. ஆனால் இரவில் மீண்டும் புழுக்கமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu