ஆளுநரின் பருப்பு தமிழகத்தில் வேகாது: திருச்சியில் வைகோ பேட்டி

வைகோ
திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய திருநாட்டில் யாரும் செய்ய முயலாத தகடு தத்து வேலைகளை தமிழ்நாடு ஆளுநர் செய்து வருகிறார். அவருக்கு அதிகாரம் கிடையாது. அமைச்சர்களை நீக்குவதும், மாற்றுவதும் முதலமைச்சருக்கு தான் அதிகாரம் உண்டு என அரசியல் சட்டம் தெளிவாக கூறுகிறது. ஆனால் இவர் டிஸ்மிஸ் செய்ததாக ஆறு மணிக்கு செய்தி கொடுக்கிறார். நடுராத்திரி ஞான உதயம் வருகிறது. அதனை நிறுத்தி வைக்க சொல்லுகிறார். அதை திருப்பி வாங்கிக் கொள்கிறார். இந்த கோமாளித்தனமான வேலையை எந்த கவர்னரும் செய்ததில்லை.
தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. மேகதாட்டு அணையை கட்ட வேண்டுமென கர்நாடகா முனைகிறது. அணை கட்டப்பட்டால் 5 மாவட்டங்களின் பாசனங்கள் அடியோடு பாழாக்கப்படும். குடிநீருக்கும் பிரச்சனை ஏற்படும். பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடகா முனைந்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தியதாக கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கூறியிருக்கிறார். அதுவும் தமிழ்நாட்டை மிகவும் பாதிக்கும். இப்பிரச்சனை தமிழகத்தை பாதிக்கக்கூடியது. இதில் ஒன்றிய அரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணையையும் வைக்கிற போக்கை மாற்ற வேண்டும்.அதனால் தான் குடியரசு தலைவருக்கு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என கையொப்ப இயக்கத்தை நடத்தி வருகிறோம்.அதற்கு எல்லா இடங்களிலும் கட்சி சார்பற்று ஆர்வத்தோடு கையொப்பமிட்டு வருகின்றனர்.
மத்திய அரசு இதற்குப் பிறகு தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்,தமிழ்நாட்டுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்ற செய்தி தமிழக மக்களுக்கு சென்றடைகிறது. இதுவே வெற்றி தானே. ஆளுநரின் போக்கு அவரது நடை உடை பாவனைகள் நடந்து செல்கிற போக்கு, பிரிட்டிஷ்காரர் கவர்னர் போல அவர் நடந்து கொள்கிறார். ஜனநாயக படுகொலையை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். தமிழ்நாட்டில் அவர் பருப்பு வேகாது.நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இருக்கிறோம். வேறு கேள்விக்கு இடமே இல்லை.
இவ்வாறு வைகோ கூறினார்.
முன்னதாக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமையில் மாநில துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்ட துணை செயலாளர்கள் டோல்கேட் துரை வடிவேல், மல்லி ராஜன், பெல் ராஜ மாணிக்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வைகோவிற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu