சுங்க இலாகா டிரைவர் உதவியுடன் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்

சுங்க இலாகா டிரைவர் உதவியுடன் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்
X

திருச்சி விமான நிலையம் (கோப்பு படம்)

சுங்க இலாகா டிரைவர் உதவியுடன் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் நடந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்து உள்ளனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட் ,ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த விமானங்களை இண்டிகோ, ஸ்கூட்டர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மலிந்தோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கி வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று திருச்சி வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது விமான நிலையத்தில் சுங்கத்துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த குமார் என்பவர் வேகமாக வெளியேறுவதை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை வெளியே எடுத்து செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த அறந்தாங்கியை சேர்ந்த நடராஜன் (வயது43)என்ற பயணி கொண்டு வந்த ஒரு கிலோ தங்கத்தை வெளியே கொண்டு வருவதற்கு உதவி செய்ததாக தெரிய வந்தது.

மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் தவிர மற்றவர்கள் செல்ல முடியாத சோதனை மையத்தை சுங்கத்துறையின் ஓட்டுநர் தாண்டிச் சென்று பயணியிடமிருந்து தங்கத்தை பெற்று வெளியே கொண்டு செல்ல முயன்ற போது பிடிபட்டுள்ளார். இந்த தங்கத்தை விமான நிலையத்தில் வெளியே பார்கிங் பகுதியில் காத்திருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த டேனியல் மைக்கேல் என்பரிடம் கொடுப்பதற்கு முற்பட்டதாக தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து தங்கத்தை பெறுவதற்காக காத்திருந்த டேனியல் மைக்கையும் சுங்கத்துறையினர் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வெளிநாடுகளில் இருந்து பலமுறை தங்கத்தை கொண்டு வந்து ஓட்டுநரின் உதவியுடன் வெளியே கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்ததாக தெரிய வருகிறது. மேலும் சுங்கத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மட்டுமே சொல்லக்கூடிய பகுதிக்கு சுங்கத்துறை ஓட்டுனர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் எனவும், இந்த கடத்தலுக்கு அதிகாரிகள் யாரேனும் உடனடியாக இருந்தார்களா? எனவும் சுங்கத்துறையின் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இந்த கடத்தலில் பங்கு பெற்ற மூவரையும் கைது செய்ய சுங்கதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுங்கத்துறை ஓட்டுனர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர். நேற்று இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 56 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business