காந்தி சிலை மாயமான வழக்கில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? வழக்கறிஞர் கேள்வி
வழக்கறிஞர் வையாபுரி.
திருச்சி அம்மன் கோவிலில் இருந்த மகாத்மா காந்தி சிலை மாயமானது குறித்து புகார் அளித்தோம். கடந்த மூன்று மாத காலமாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி வரகனனேரி நித்தியானந்தபுரத்தில் முத்துக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்கு முன்பாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது கோவிலின் மேல் புறத்தில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டிருந்தது. தண்டி யாத்திரையில் வரகனேரி நித்தியானந்தபுரத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டதன் நினைவாக மகாத்மா காந்தி சிலை கோவிலின் மேல் புறத்தில் நிறுவப்பட்டு இருந்தது.
கும்பாபிஷேக திருப்பணிகளுக்கு பின்னர் இந்த மகாத்மா காந்தி சிலை திடீரென காணவில்லை. இது குறித்து கோவில் நிர்வாகிகளிடம் விசாரித்த போது உரிய விளக்கம் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி திருச்சி மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்டோருக்கு புகார் அளித்தார். புகார் அளித்தவுடன் இந்த மனு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை புகார் மனு ரசீது கூட வழங்காமல் காவல் நிலையத்தில் மெத்தனமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து வழக்கறிஞர் மகேஸ்வரி கூறுகையில் கடந்த மூன்று மாதத்தில் நான்கு முறை காவல்துறையினரை நேரில் சந்தித்து இது தொடர்பாக புகார் அளித்துள்ளேன். இந்த மனு விசாரணைக்காக காந்திமார்க்கெட் காவல் நிலையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் மனு ரசீது கூட வழங்கவில்லை. இது தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் கூட நடத்தவில்லை. காவல் நிலையத்தில் உள்ளவர்கள் ஏன் இவ்வளவு நித்திரமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஒரு தேசத்தின் தந்தை சிலை காணவில்லை என்பதை ஒரு சீரியஸ் மேட்டராகவே அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. இது தொடர்பாக கோவில் நிர்வாகிகளிடம் விசாரிக்கவில்லை இந்து அறநிலையத்துறை அலுவலகமும் ஆரம்பகட்ட விசாரணை கூட நடத்தவில்லை. காவல் நிலைய அதிகாரிகளின் இத்தகைய அலட்சிய போக்கு ஆச்சரியமாக உள்ளது .ஆகவே உடனடியாக காவல்துறை ஆணையரின் தலையிட்டு மகாத்மா காந்தி சிலையை கண்டுபிடித்து உரிய இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu