திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெறிநாய் கடிக்கு இலவச தடுப்பூசி
வெறிநோய் (ரேபிஸ்) என்பது வைரசினால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஓர் உயிர்க்கொல்லி நோயாகும். வெறிநோய் (ரேபிஸ்) வைரஸ் நோய் தாக்கப்பட்ட மிருகங்கள் (நாய், பூனை, மாடு, குதிரை, ஆடு, பன்றி மற்றும் பிற) கடித்தல் மற்றும் கீறுவதன் மூலமாக அவற்றின் எச்சிலின் வழியே மனிதர்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் பரவுகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வெறிநாய் கடியினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர;வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்கடி மற்றும் வெறிநோய்க்கான தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.
வெறிநோய் 100 சதவீதம் தடுக்க கூடிய ஒன்றாகும். எனவே பொதுமக்கள் தெரு நாயோ அல்லது வீட்டு செல்லப்பிராணியோ கடித்தாலோ, நக்கினாலோ உடனடியாக கடிப்பட்ட இடத்தை முழுமையாக சோப்பு மற்றும் அதிகப்படியான தண்ணீரை கொண்டு 15 நிமிடங்கள் கழுவ வேண்டும். உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நான்கு தவணைகள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றி தங்களை நோய்தொற்றிலிருந்து பாதுக்காத்துக் கொள்ளுமாறும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா பிரதீப்குமார் தெரிவித்து உள்ளார். திருச்சி மாவட்டத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் நடமாடுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பதோடு அந்த நாய்கள் கடித்து விட்டால் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஊசி போட்டுக்கொள்வது முக்கிய மான ஒன்றாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu