நிலம் வாங்கி தருவதாக கூறி கராத்தே மாஸ்டரிடம் ரூ.6.7 லட்சம் மோசடி

திருச்சி கராத்தே மாஸ்டரிடம் ரூ. 6.7 லட்சம் மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
திருச்சி கே.கே.நகர் தங்கையா நகர் 7-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 35). கராத்தே மாஸ்டரான இவர் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். மேலும் பயிற்சி மையமும் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் சோமரசம்பேட்டை வாசன் வேலி 15-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற நில புரோக்கர் அவருக்கு அறிமுகமானார். பின்னர் பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் அருகாமையில் உள்ள நாகமங்கலம் பகுதியில் குறைந்த விலைக்கு வீட்டுமனை உள்ளது என ஆசை வார்த்தை கூறினார்.
மேலும் அங்குள்ள ஒருவரது நிலத்தை அவருக்கு காண்பித்தார். அந்த வீட்டுமனை சங்கருக்கு பிடித்துப் போனது. அதைத்தொடர்ந்து தன்னிடம் இருந்த நகைகளை அடமானம் வைத்து அவரிடம் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை கொடுத்தார். ஆனால் சுரேஷ் கூறியபடி அவருக்கு அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சங்கர் சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் நில புரோக்கர் சுரேஷ் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி பஞ்சப்பூரில் தற்போது ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணி முழு வீச்சில் நடந்துவருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பட்டா நிலம் மற்றும் புறம்போக்குநிலங்களை காட்டி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. எனவே இதனை தடுக்க போலீசாரும் வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu