அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: கிராம உதவியாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ.5 லட்சம் மோசடி: கிராம உதவியாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

பைல் படம்.

மண்ணச்சநல்லூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த கிராம உதவியாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.5 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக கிராம உதவியாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவருடைய மனைவி பேபிராணி (வயது 34). இவருடைய வீட்டின் அருகில் வசிப்பவர் செல்வராஜ். இவர் கரியமாணிக்கம் வருவாய் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரூ.5 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாக பேபி ராணியிடம் செல்வராஜ் கூறியுள்ளார். இதை நம்பி மண்ணச்சநல்லூர் ஓம்சக்தி மாரியம்மன் கோவில் உள்ளே வைத்து துறையூரை சேர்ந்த சந்துரு மற்றும் அவருடைய சகோதரரிடம் செல்வராஜ் மூலம் ரூ.5 லட்சத்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் 3 மாதங்களில் வேலை வாங்கிக் கொடுப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் பல மாதங்கள் ஆகியும் அவர்கள் அரசு வேலை வாங்கித் தரவில்லை. இதற்கிடையே சந்துரு இறந்து விட்டார். இதுபற்றி அறிந்த பேபிராணி, அரசு வேலைக்காக தான் கொடுத்த பணத்தை செல்வராஜிடம் சென்று கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை. மேலும் இதுபோல் 40-க்கும் மேற்பட்டோரிடம் அவர்கள் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பேபிராணி திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயத்திடம் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக கிராம உதவியாளர் செல்வராஜ் உள்பட 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சபரிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story