திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் நிறுவன நாள் விழா

திருச்சி தேசிய தொழில்  நுட்ப கழகத்தில் நிறுவன நாள் விழா
X

திருச்சி என்ஐடி நிறுவன நாள் விழாவில் திருப்பதி ஐஐடி இயக்குனர் சத்யநாராயணா பேசினார்.

திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் நிறுவன நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

03.05.2024:தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளியின் (என்ஐடி-டி) 61வது கல்வி நிறுவன தின நாள் ஆகும். இந்த விழா இன்று என்ஐடி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திருப்பதியில் அமையப்பெற்றுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் கே.என். சத்யநாராயணா மற்றும் என்ஐடி திருச்சியின் இயக்குநர் (பொறுப்பு) முனைவர். என். குமரேசன், டீன் (ஆசிரியர் நலன்) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மற்ற உறுப்பினர்கள் தங்கள் வருகையால் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

பேராசிரியர் கே. என். சத்யநாராயணா தனது உரையின் போது, தற்போதைய சூழ்நிலையில் கடுமையான போட்டி இருந்த போதிலும் வேலை வாய்ப்பு விகிதங்களை தொடர்ந்து தக்கவைத்து கொண்டதற்கு என்ஐடி திருச்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். விக்சித் பாரதத்தின் (Viksit Bharat) இலக்குகளை நடைமுறைப்படுத்த, உயர்கல்வி நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்த முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறினார். நிலையான வளர்ச்சிக்கும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் புதுமையான கண்டுபிடிப்புகள் மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒரு வலுவான ஆராய்ச்சி சுற்றுச்சூழலை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம், பல வேலைத் துறைகளில் மனிதர்களை மாற்றி கொண்டு வரும் சூழலில், கல்வியாளர்களின் புதுமையான கண்டுபிடிப்புகளின் மூலமே புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை அவர் எடுத்துரைத்தார். மாணவர்கள் தங்களது மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் பொழுது AI மட்டுமின்றி மற்ற பொறியியல் துறைகளிலும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

இயக்குநர் முனைவர். ஜி.அகிலா, சார்பாக முனைவர். என். குமரேசன் இயக்குனர் உரையினை வழங்கினார். அவர் கூறுகையில், தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 க்கான என்ஐடி திருச்சிராப்பள்ளியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி, ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தின் கீழ் (ITEP), பி. எஸ்சி. (B.Sc.), பி.எட். (B.Ed.) பாடத்திட்டமானது, 2024-25 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

நிறுவனத்தின் சாதனைகளின் முக்கியத்துவத்தை, கல்வி நிறுவனங்களுக்கான உலக தரவரிசை (QS) மற்றும் தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு (NIRF) பட்டியலின் மூலம் அவர் எடுத்துரைத்தார். இந்தியாவில் உள்ள 31 என்ஐடி -களில் என்ஐடி திருச்சிராப்பள்ளி முதல் இடத்தையும், நாட்டின் அனைத்து பொறியியல் நிறுவனங்களில் ஒன்பதாவது இடத்தையும் பெற்றிருப்பதை பெருமையுடன் கூறினார். 2024 ம் ஆண்டிற்கான உலக (QS) தரவரிசை பட்டியலில் என்ஐடி திருச்சிராப்பள்ளி 781-790 என்ற வரிசையில் உயர்ந்துள்ளது என்பதை அவர் தெரியப்படுத்தினார்.

என்ஐடி திருச்சிராப்பள்ளி, 5G அலைக்கற்றை பயன்பாட்டு நிகழ்வு (5G Use case award) விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நமது நாட்டிலுள்ள முக்கியமான ஆறு நதிகளை நிர்வகிக்கும் பொறுப்பை அமல்படுத்திய ஜல் சக்தி அமைச்சகம் (Ministry of Jal sakthi) 12 தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், தமிழ் நாட்டிலுள்ள காவிரிப் படுகைக்கான ஆராய்ச்சி, மதிப்பீடு மற்றும் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கும் பொறுப்பு என்ஐடி திருச்சிராப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளதையும் அவர் எடுத்துரைத்தார். கூடுதலாக, என்ஐடி திருச்சிராப்பள்ளியில் "திறன் பயிற்சி மையத்தை (The Skill Training Hub)" கல்வி அமைச்சகம் (MoE) மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் (MSDE) நிறுவியுள்ளது. இந்த மையத்தின் மூலம் 200 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, இளைய தலைமுறை மென்பொருள் மேம்பாட்டாளர், அலுவலக உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, என்ஐடி திருச்சிராப்பள்ளி மாணவர்களை மேம்படுத்தவும், தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும் மற்றும் வேலை தேடுபவர்களை விட வேலைகளை உருவாக்குபவர்களை வளர்க்கவும் ஒரு " இன்னோவேஷன் மையம் (Innovation Hub)" நிறுவப்படும் என்று அவர் அறிவித்தார்.

முனைவர். எஸ். டி. ரமேஷ், டீன் (கல்வி) நடப்பு கல்வியாண்டில் என்ஐடி திருச்சிராப்பள்ளியின் குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கோடிட்டுக் காட்டும் விரிவான அறிக்கையை வழங்கினார். சிறப்பாகச் செயல்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களுக்கு சாதனை விருதுகள் மற்றும், சிறப்பாகச் செயல்பட்ட துறைக்கு சாதனை விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, 2024 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த சிறந்த மாணவியாக ஹர்ஷிதா ஆர்.இ.சி. / என்ஐடி இன் முன்னாள் மாணவர்கள் சங்கமான RECAL - ஆல் கௌரவிக்கப்பட்டார். மேலும் அவருக்கு RECAL மூலம் நிதியுதவியும் வழங்கப்பட்டது. இந்த விருதினை பெற்றுக்கொண்டதற்கு செல்வி எஸ். ஹர்ஷிதா அவர்கள், இயக்குனர், ஆசிரியர்கள் மற்றும் RECAL க்கு தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!