திருச்சி மாவட்ட மக்களுக்கு கலெக்டர் சிவராசு வெள்ள அபாய எச்சரிக்கை
திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் அருகில் குடமுருட்டியில் திறக்கப்பட்ட தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து செல்கிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்தும், இடைவெளி விட்டும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதாவது 5, 6-ஆகிய தேதிகளில் ஓய்ந்திருந்த மழை நேற்று நள்ளிரவுக்கு மேல் மாநகரிலும், புறநகர் பகுதிகளிலும் விடிய, விடிய கனமழை பெய்தது.
இதனால் திருச்சி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக எடமலைப்பட்டி புதூர், டோபிகாலனி, ராமச்சந்திராநகர், உறையூர், சண்முகாநகர், எம்.எம்.நகர், ராமலிங்கநகர், குழுமணி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் கனமழை பெய்ததால் அதிகமான தண்ணீர் தேங்கியது. இதன் வடிகாலான கோரையாற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிவாரண பணிகள் நடந்து வருகிறது. இந்த கோரையாற்று தண்ணீர் குழுமாயி அம்மன் கோவில் பின்புறம் 6 கண் பாலம் வழியாக வந்து குடமுருட்டி வாய்க்கால் வழியாக சிந்தாமணி அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. தற்போது காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் இருந்து வரும் தண்ணீர் காவிரியில் சற்று குறைவான வேகத்தில் தான் செல்கிறது.
இதனையடுத்து திருச்சி மாவட்டத்தில் கலெக்டர் சிவராசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடத்தில் 10ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் தாழ்வான பகுதிகளை விடடு வெளியேறி பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் உய்யகொண்டானில் நீர்வரத்து அதிகரித்ததன் அடிப்படையில் குழுமாயி அம்மன் கோவில் அருகே உள்ள 6 கண் மதகில் இருந்து தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu