நெஞ்சில் கல்லை வைத்து 14-ம் நாளாக விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்
நெஞ்சில் கல்லை வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 14-ஆம் நாளாக இன்று நெஞ்சில் கல்லை வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 வேளாண் சட்டங்களை வாபஸ்பெற வேண்டும். விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபம் தர வேண்டும். மழையினால் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்யவேண்டும்.
உத்திர பிரதேசம் மாநிலம், லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அதன் தலைவர் அய்யாக்கண்ணு போலீசில் அனுமதி கோரியிருந்தார்.
ஆனால் போலீசார் அந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் திருச்சி அண்ணாமலை நகரில் திருச்சி- கரூர் பைபாஸ் ரோடு மலர் சாலையில் உள்ள அவரது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 12-ம் தேதி தொடங்கினர். இந்த போராட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) 26-ஆம் தேதி வரை 46 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
முதல் நாள் அரை நிர்வாணமாக வீட்டில் பிரதான நுழைவு வாயில் கதவை பூட்டிக்கொண்டு, சுற்றுச்சுவர் வளாகத்தில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் 14-ஆம் நாளான இன்று அக்டோபர் 25-ல் நெஞ்சில் கல்லை வைத்து நூதன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu