திருச்சி முக்கொம்பில் கர்நாடகத்திற்கு எதிராக விவசாயிகள் மனித சங்கிலி
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதி மன்றம் பிறப்பித்த இறுதி உத்தரவுகளின்படி கர்நாடக மாநில அரசு இதுவரை காவிரியில் நீர் திறந்து விடவில்லை. இதனை கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனாலும் கர்நாடக மாநில அரசு இதுவரை தண்ணீர் திறந்து விடவில்லை.
இந்நிலையில் காவிரி நீர் பங்கிட்டு உரிமையை மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், நெய்வேலி ,கூடங்குளம் மின் நிலையங்களில் இருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும், தமிழகத்தில் உள்ள ஆறுகள், ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முக்கொம்பு மேலணையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து முக்கொம்பு காவிரி பாலத்தில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக விவசாயிகள் காவிரி பாலத்தில் ஊர்வலமாக சென்றனர். இந்த போராட்டத்துக்கு தமிழகவிவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார்.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாநிலத்தலைவர் சின்னசாமி, மாநில பொதுச்செயலாளர் சுந்தரம், உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்என 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக முக்கொம்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu