திருச்சியில் பைக் வீலிங் சாகசம் செய்த 7 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

திருச்சியில் பைக் வீலிங் சாகசம் செய்த 7 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
X
திருச்சியில் பைக் வீலிங் சாகசம் செய்த 7 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

திருச்சியில் பைக் வீலிங் சாகசம் செய்த ௭ இளைஞர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று பைக் வீலிங் என்ற பெயரில் இளைஞர்கள் சாகச நிகழ்ச்சிகளை நடத்தி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். திருச்சி காந்தி மார்க்கெட், உய்ய கொண்டான் வாய்க்கால் கரை ,கோட்டை பகுதி ஆகிய இடங்களில் உயர் ரக மோட்டார் சைக்கிள்களில் பட்டாசுகளை கட்டிக் கொண்டு அவர்கள் சாகசம் செய்தனர். இந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர்.

பைக் வீலிங் போன்ற சாகசங்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில் இந்த இளைஞர்கள் செய்த செயல் போலீசாருக்கு மிகுந்த சவாலாக அமைந்தது. இதனை தொடர்ந்து சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் வாகனங்களின் எண்களை கொண்டு அதனை செய்த இளைஞர்கள் யார் என போலீசார் கண்டுபிடித்து 12 பேரை கைது செய்தனர்.

அவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். தற்போது இந்த இளைஞர்களில் ஏழு பேருடைய ஓட்டுனர் உரிமத்தை அதாவது டிரைவிங் லைசென்சை ரத்து செய்து தமிழக போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

எத்தனை ஆண்டுகளுக்கு இந்த ரத்து நடவடிக்கை என அறிவிக்கப்படவில்லை ஏற்கனவே பிரபல யூடியூபர் டி.டி.எப் வாசன் ஓட்டுநர் உரிமம் பத்து ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டு செய்யப்பட்டது. நீதிமன்ற எச்சரிக்கைக்கு பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story