5 கோட்டத்திலும் நாய் கருத்தடை மையம்- திருச்சி மேயர் அன்பழகன் பேட்டி
மேயர் அன்பழகன்.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். பாதாள சாக்கடை பிரச்சனை, சொத்து வரி பெயர் மாற்றம், பட்டா பெயர் பதிவேற்றம் செய்தல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மொத்தம் 42 மனுக்கள் மேயரிடம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அன்பழகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலைகளில் நடமாடும் ஆடு, மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இது பற்றி பொதுமக்களிடம் இருந்து அதிக புகார்கள் வந்துள்ளன. ஆதலால் இனி வரும் காலங்களில் ஆடு, மாடு வளர்ப்போர் அவற்றை சாலையில் விடாமல் கட்டி வைத்து வளர்க்க வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனை மீறி சாலைகளில் கால்நடைகள் திரிந்தால் அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி நகரில் நாய் தொல்லை எல்லா வார்டுகளிலும் இருப்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தார்கள். நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது திருச்சி மாநகராட்சி பகுதியில் ஒரே ஒரு நாய் கருத்தடை மையம் மட்டும்தான் உள்ளது. கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று 5 கோட்டங்களிலும் தலா ஒரு நாய் கருத்தடை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாய் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu