திருச்சியில் கலெக்டர் முன் தி.மு.க. கவுன்சிலர்களின் ஆதரவாளர்கள் மோதல்

தி.மு.க. வினர் மத்தியில் ஏற்பட்ட மோதலில் போலீசார் சமாதானம் செய்தனர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 55-வது வார்டில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை நடைபெற்றது. இந்த வார்டின் கவுன்சிலராக புஷ்பராஜ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை மிளகுபாறை சுகாதார நிலையத்தில் திருச்சி கலெக்டர் சிவராசு போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பக்கத்து வார்டு கவுன்சிலரான 54-வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது போட்டோகிராபர்கள் போட்டோ எடுத்தனர்.
அப்போது கவுன்சிலர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களும் போட்டோவுக்குபோஸ் கொடுத்துள்ளனர். அப்போது 54 வார்டு கவுன்சிலர் ராமதாசின் ஆதரவாளர் ஒருவரும் போட்டோ எடுத்த இடத்தில் இருந்துள்ளார். இதனைப்பார்த்த 55-வது வார்டு கவுன்சிலரின் ஆதரவாளரும் வார்டு பொறுப்பாளருமான மூவேந்திரன் போட்டோவுக்கு மற்ற வார்டை சேர்ந்த யாரும் நிற்க வேண்டாம் என கூறி 54- வார்டு நபரை இழுத்துள்ளார்.
அப்போதே கலெக்டர் முன்னிலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சி முடிந்து கலெக்டர் சிவராசு புறப்பட்ட நிலையில் "எங்க ஏரியாவுக்கு நீ ஏன் வர" என கேட்டு 55 வார்டு நபர்கள் சந்தம் போட இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது கவுன்சிலர் ராமதாஸ் கலெக்டர் நிகழ்ச்சி என்பதால் நாங்கள் வந்தோம் என கூறியுள்ளார். இதையடுத்து இருதரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். நடைபெற்ற தேர்தலில் தேர்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் அனைவரும் வரும் 2-ந்தேதி தான் பதவி ஏற்க உள்ளனர். அதற்குள்ளாக தி.மு.க. கவுன்சிலர்களின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதல் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu