தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் ஆணைக்கிணங்க மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து, திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான வெல்லமண்டி நடராஜன்,புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இதில் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், தி.மு.க. ஆட்சி அமைந்து மக்களுக்கு எந்த ஒரு நல்ல காரியமும் முழுமையாக செய்யவில்லை குறிப்பாக பேனர் கலாச்சாரத்தை ஒழிப்போம் என சொல்லிக்கொள்ளும் தி.மு.க.வினர் திருச்சி மாநகரை பொருத்தவரை தி.மு.க. அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு மாநகர் முழுவதும் பேனர் வைத்து வருகின்றனர். காவல்துறையினர் தி.மு.க.வின் பேனரை அகற்றவில்லை என்றால் தி.மு.க.வின் பேனர் மீது அ.தி.மு.க. போஸ்டர் ஒட்டப் படும் என்றார்.
பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வேண்டும், கட்டுக்கடங்காத அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும், அம்மா கிளினிக் திட்டத்தை தி.மு.க. அரசு மூட நினைப்பதை கைவிட வேண்டும், தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் அமல்படுத்த வேண்டும்,
மழையினால் பாதிக்கப்பட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் டி. ரத்தினவேல் (முன்னாள் எம்.பி), முன்னாள் அமைச்சர் வளர்மதி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர். சிவபதி, இணை செயலாளர் முன்னாள் துணைமேயர் சீனிவாசன், மற்றும் திருச்சி மாநகர், புறநகர் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu