திருச்சியில் தேசிய கொடி ஏற்றினார் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு காவலர்களின் அணி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். பின்னர் சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக மூவர்ணபலுன்களையும், சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வானில் பறக்கவிட்டு, தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
இதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, காவல்துறை, மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணித்துறை, கரூவூலம் மற்றும் கணக்கு துறை, அரசுப் போக்குவரத்துக் கழகம், கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட சிறப்பாகப் பணியாற்றிய 445 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி பாராட்டினார்.
மேலும், வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, ஆதிதிராவிடர் நல மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில், 157 பயனாளிகளுக்கு ரூபாய் 1.62 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
முன்னதாக சுதந்திர தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் காந்தி மார்க்கெட் அருகில் உள்ள முதலாம் உலகப் போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் 10 பள்ளிகளைச் சேர்ந்த 715 மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் காமினி, காவல்துறை துணை தலைவர் பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், மாநகர காவல் துணை ஆணையர்கள் செல்வகுமார் அன்பு, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu