லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய திருச்சி துணை கலெக்டரின் வங்கி கணக்கு முடக்கம்
திருச்சி துணை கலெக்டர் பவானி.
திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் நெல்சன் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். தொழில் அதிபர். இவரது மனைவி பவானி. இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வருவாய் நீதிமன்றத்தின் தனித்துணை கலெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் துணை கலெக்டரான பவானி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் 3 குழுக்களாக பிரிந்து நேற்று முன்தினம், ஸ்ரீரங்கம் நெல்சன் ரோட்டில் உள்ள பவானிக்கு சொந்தமான வீடு, லால்குடி அருகே வாளாடியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம், மண்ணச்சநல்லூரில் உள்ள பள்ளிக்கூடம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து 8 மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த சோதனையில் பல லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது. மேலும் அவரது வங்கி கணக்குகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடக்கினர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், துணை கலெக்டர் பவானி வரம்பு மீறி சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 7 ஆண்டு காலகட்டத்தில் ரூ.5 கோடியே 4 லட்சம் வருமானம் உயர்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இது பவானியின் 7 ஆண்டு வருமானத்தை காட்டிலும் 306 சதவீதம் அதிகம் ஆகும். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu